நம்பிக்கையுடன் தொடங்கிய வாழை விவசாயம் நஷ்டத்தைக் கொடுத்தது. சரி, செய்து பார்ப்போமே என 5 நாட்டு ரக ஆடுகளுடன் துவங்கிய ஆட்டுப்பண்ணை லாபம் தரும் தொழிலாக மாறி இருக்கிறது. இதுதான் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வத்தின் சுருக்கமான கதை. அதைக் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என அவரைச் சந்தித்துக் கேட்டோம்.“பத்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். பிறகு ரேஷன் கடையில் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட 15 வருடம் வேலை பார்த்தேன். இதற்கிடையில் எனது அப்பா எங்களுடைய நிலத்தை என்னிடம் கொடுத்து விவசாயம் பார்க்கச் சொன்னார். அவர் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தார். இதற்கு மாற்றாக நான் வாழையை சாகுபடி செய்தேன். ஆனால் 2002ம் ஆண்டின் சித்திரை மாதத்தில் அடித்த காற்றில் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. இதில் எனக்கு பெருத்த நஷ்டம். இதனைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்பினேன். 2003ம் ஆண்டில் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து முதன்முதலாக 5 நாட்டு ரகப் பெட்டை ஆடுகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தேன். இதற்காக ஒரு கிடா ஆட்டினையும் வாங்கி வளர்த்தேன். இதில் கிடைத்த குட்டிகளை விற்பனை செய்யாமல் நானே 3 வருடங்கள் வளர்த்தேன். அதன்பிறகு குட்டி மற்றும் பெரிய ஆடுகளை விற்க ஆரம்பித்தேன். இப்போது பெரிய பண்ணையாக மாறி இருக்கிறது.
6×10 என்ற அளவில் ஆஷ்பெட்டாஷ் ஷீட் போட்ட ஒரு கொட்டகை, 22×40 என்ற அளவில் தென்னங்கீற்றுக்கு மேல் தகரம் அமைக்கப்பட்ட ஒரு கொட்டகை, 22×44 என்ற அளவில் பேனல் போட்ட ஒரு கொட்டகை என 3 கொட்டகைகள் தற்போது ஆடுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தவொரு கொட்டகையும் நான்கு புறமும் அடைத்தது போல் இருக்காது. ஃபென்சிங் கம்பி மட்டுமே கட்டி வைத்திருக்கிறேன். இதன்மூலம் ஆடுகளுக்கு தேவையான காற்று தாராளமாக கிடைக்கிறது. பண்ணையும் நாற்றம் வராமல் இருக்கிறது. தரையில் மண் மட்டும்தான். இதனால் ஆடுகளின் சிறுநீரை மண் இழுத்துக்கொள்ளும்.ஒவ்வொரு ஷெட்டிலும் ஆடுகளின் வயதுக்கு தகுந்தாற் போல் அடைத்து வைத்திருக்கிறோம். இனப்பெருக்கத்திற்கான ஆடுகளுக்கு ஒரு கொட்டகை, குட்டி ஆடுகளுக்கு ஒரு கொட்டகை, சினை ஆடுகளுக்கு ஒரு கொட்டகை என பிரித்து வைத்திருக்கிறேன். 5 ஆடுகளில் தொடங்கிய என்னுடைய பயணம் இன்றைக்கு 40 தாய் ஆடுகள், 60 குட்டி ஆடுகள், 4 கிடாய்கள் என வளர்ந்திருக்கிறது. இனப்பெருக்கத்திற்காக 10 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடாய் என்ற கணக்கில் வைத்திருக்கிறேன்.
ஆடுகளைப் பொருத்தவரையில் மருத்துவப் பராமரிப்பு மிகவும் முக்கியம். நாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பிஆர்பி தடுப்பூசி போடுவோம். ஆடுகள் அனைத்தையும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல முடியாது. அதனால் கால்நடை மருத்துவமனையில் முன்னரே தடுப்பூசி போடுவது குறித்து தெரிவித்தால் மருத்துவர்கள் நேரடியாக வந்து தடுப்பூசி போடுவார்கள். இதுபோக மாதத்திற்கு ஒருமுறை ஆடுகளுக்கு பூச்சி மருந்து கொடுப்போம். ஒரே மருந்தை அடுத்தடுத்து கொடுக்க மாட்டோம். மாதம் ஒரு மருந்தை மாற்றுவோம். அப்போதுதான் மருந்து வேலை செய்யும்.
ஆட்டுப்பண்ணையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஆடுகளின் கழிவு மூலமே பல பிரச்சினைகள் வரக்கூடும். அதனால் ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது கொட்டகையை சுத்தம் செய்து விடுவோம். தீவன முறையில் நான் அதிக கவனம் செலுத்துவேன். சினை ஆடுகளுக்கு காலை, மாலை என இரு வேளையும் அடர் தீவனம் கொடுப்பேன். ஒரு வேளைக்கு 300 கிராம் தீவனம் கொடுப்பேன். அதேபோல்தான் குட்டி ஆடுகளுக்கும் காலை மாலை என்று இருவேளை அடர்தீவனம் கொடுப்பேன். குட்டிகளுக்கு வேளைக்கு 100 கிராம் கொடுத்தால் போதுமானது. இதுபோக மற்ற ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை அடர்தீவனம் கொடுப்பேன். அடர்தீவனத்தை நான் வெளியில் இருந்து வாங்குவது கிடையாது. உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறு, துவரம்பருப்பு, கோதுமை, புண்ணாக்கு போன்றவற்றை கொண்டு நானே தயார் செய்கிறேன். ஆடுகளுக்கு சரியான முறையில் ஜீரணம் ஆக இந்த அடர்தீவனத்தோடு உப்பு, சோடா உப்பு போன்றவற்றையும் கலந்து கொடுப்பேன்.
இதுபோக மூன்றரை ஏக்கரில் சூப்பர் நேப்பியர், மல்பெரி, சவுண்டால், கோஎப்எஸ் 31, கோஎப்எஸ் 29, குட்டை நேப்பியர் தீவனப்பயிர்களை நடவு செய்திருக்கிறேன். இதை வாரம் ஒருமுறை அறுவடை செய்து தீவனமாகக் கொடுப்பேன். இது ஆடுகளுக்கு அசை போடுவதற்கு ஏற்ற தீவனம். இவை அனைத்தும் புல் வகையைச் சேர்ந்தவை என்பதால் வெட்ட வெட்ட மறுபடி முளைத்து வரும்.சீசனைப் பொருத்துதான் ஆடுகள் விற்பனையாகும். திருச்சி பொன்னர் சங்கர் திருவிழாவிற்கு பலரும் இங்கிருந்துதான் ஆடுகளை வாங்கி செல்கிறார்கள். இந்த சுற்றுவட்டாரத்தில் நடக்கும் விசேஷங்களுக்கும் நாங்கள்தான் ஆடுகளை விற்பனை செய்கிறோம். 25 லிருந்து 30 கிலோ வரை வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்துவிடுவேன். ஆடுகளை உயிர் எடையுடன் ஒரு கிலோ ரூ.550 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். தாய் ஆடுகளை விற்பனை செய்வது கிடையாது. இடைவெட்டு ஆடுகளை மட்டுமே விற்பனை செய்கிறேன். ஒரு வருடத்திற்கு எப்படியும் 55 லிருந்து 65 ஆடுகள் விற்பனையாகும். சராசரியாக ஒரு ஆடு 26 கிலோ இருக்கும். சராசரியாக 60 ஆடுகள் விற்பனை செய்வேன். இதன்மூலம் ஒரு வருடத்திற்கு ரூ.8,58,000 வருமானமாக கிடைக்கிறது. இதில் அடர்தீவன மூலப்பொருள் செலவு, மருத்துவ செலவு, பராமரிப்பு செலவு ரூ.3,50,000 போக ரூ.5,08,000 லாபமாகக் கிடைக்கிறது. இதுபோக அசில் பெருவிடை கோழிகளையும் விற்பனை செய்து வருகிறேன். இதில் வருடத்திற்கு 80 கோழிகளை ஒரு கிலோ ரூ.600 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். ஒரு கோழி சராசரியாக 2 கிலோ இருக்கும். கோழிகளை விற்பனை செய்வதன் மூலம் வருடத்திற்கு ரூ.96,000 ஆயிரம் கிடைக்கிறது. இதில் செலவு பெரிதாக கிடையாது. முழுக்க லாபம்தான்’’ என புன்னகையுடன் கூறுகிறார் செல்வம்.
தொடர்புக்கு:
செல்வம்: 99421 68568.
ஆடுகளைப் பொருத்தவரை வயிறு உப்புசம் பெரிய பிரச்சினையாக இருக்கும். ஆடுகள் சோர்ந்து இருந்தாலோ, சரியானபடி தீவனம் எடுக்கவில்லை என்றாலோ அதன் வயிற்றை தொட்டுப் பார்ப்பது அவசியம். பலூன் போல் வீங்கி இருந்தால் 5 கிராம் பெருங்காயத் தூளில் 20 மில்லி தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
மல்பெரி ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மல்பெரி பழங்களை மதிப்புக்கூட்டல் செய்வது தொடர்பான ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஓசூரில் அமைந்துள்ள மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கிவரும் பட்டுப் புழுவியல் துறையில் அதிக பழ மகசூலை கொடுக்கக் கூடிய மல்பெரி இனங்களைக் கண்டறியவும், மல்பெரி பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கவும் ஏற்ற வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் பல உயரிய சத்துக்களை உள்ளடக்கிய மல்பெரி பழங்களின் பயன்பாடு மேம்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ் வேந்தன், மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலைய இயக்குநர் இசிதா நாயக் ஆகியோர், பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் சார்பில் முனைவர் திரிவேணி, முனைவர் லோகேஷ் குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
The post அசத்தலான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு! appeared first on Dinakaran.