தர்பூசணி, வெள்ளரி, வேர்க்கடலை…கலக்கலான விளைச்சல் எடுக்கும் கல்லூரிப் பேராசிரியர்!

6 hours ago 3

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, வாழை, ரப்பர், நெல் போன்ற பயிர்களே அதிகளவில் சாகுபடி செய்யப்படும் நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் சாலமோன் ஜீவா தர்பூசணியைப் பயிரிட்டு கடைகளுக்கு நேரடியாக சப்ளை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார். அதுகுறித்து கடந்த இதழில் கண்டோம். தர்பூசணியில் அவர் மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகள் குறித்தும், வேறு சில பயிர்களின் சாகுபடி விவரங்கள் குறித்தும் இந்த இதழில் காண்போம். “தர்பூசணி சாகுபடியின்போது வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி விடக்கூடாது. அதேபோல காய்களின் கீழ்ப்பகுதியிலும் தண்ணீர் தேங்கிவிடக்கூடாது. அவ்வாறு தேங்கினால் தர்பூசணிக் கொடிகளும், பழங்களும் அழுகிவிட வாய்ப்பு ஏற்படும். தர்பூசணியில் காய் காய்த்ததும் அப்படியே போட்டுவிடக்கூடாது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை காயை மாற்றிப் போடவேண்டும். அப்படியே போட்டுவிட்டால் மண்ணில் படும் பகுதி அழுகிவிடும். இதனால் காயை உருட்டி மாற்றிப் போட வேண்டும். இதுபோல் செய்வதால் காய்கள் அழுகாமலும் சீரான, நல்ல நிறம் கொண்ட பழங்கள் கிடைக்கும்.

தர்பூசணி விதைப்புக்கான விதைகள் வாங்கியது, உரம் வைத்தது போன்ற பணிகளுக்கு குறைவான செலவுதான் ஆனது. ஆனால் தர்பூசணி சாகுபடி செய்து 70 நாட்களில் ரூ.75 ஆயிரம் வரை லாபம் கிடைத்திருக்கிறது. இன்னும் 3 டன் காய்கள் வயலில் உள்ளதால் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் வரை கூடுதலான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.தர்பூசணியைத் தவிர வெண்டைக்காய், புடலங்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், வேர்க்கடலை ஆகிய பயிர் களையும் சாகுபடி செய்திருக்கிறேன். இதற்கும் நான் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது இல்லை. காய்கறிப் பயிர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்வோம். தர்பூசணியைப் போல வெள்ளரிக்காயிலும் நல்ல வருமானம் கிடைக்கிறது. எனது நிலத்தில் இருந்து 10 மூடை வெள்ளரி மகசூலாக கிடைக்கிறது. ஒவ்வொரு மூடையும் 50 கிலோ எடை கொண்டது. ஒரு மூடை வெள்ளரிக்கு ரூ.800 முதல் 1300 வரை விலை கிடைக்கும். சராசரியாக ரூ.1000 கிடைத்தாலும் 10 மூடை காய்களின் மூலம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.

எனது வயல்களில் பெரும்பாலும் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை. எனது நண்பர்கள் பலர் நான் வயலில் இருக்கும் சமயங்களில் இங்கு வந்து என்னோடு இணைந்து பராமரிப்பு பணிகளைக் கவனிப்பார்கள். அவர்களுக்கு எனது வயல்களில் விளையும் காய்கறிகளை வழங்குவேன். சில காய்கறிகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களே பறித்துச் செல்வார்கள். காய்கறி விளையும் சமயங்களில் காய்கறிகளை எடுத்துச் செல்வார்கள். நெல் விளையும் சமயங்களில் நெல்லை எடுத்துச் செல்வார்கள். ரசாயனம் போடாத விளைச்சல் என்பதால் அவர்கள் அவற்றை விரும்பி தங்கள் வீடுகளுக்குச் சென்று சமைத்துச் சாப்பிடுவார்கள். நண்பர்களுக்கு வழங்குவதுபோல எனது வயலின் அருகே உள்ள மற்ற வயல்களின் உரிமையாளர்களுக்கும் இயற்கையில் விளைந்த காய்கறிகளைக் கொடுப்பேன்.

எனது வீட்டைச் சுற்றி காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சாகுபடி செய்திருக்கிறேன். இயற்கை விவசாயத்திற்கு கால்நடை அவசியம் என்பதால் பசு மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றின் மூலம் பால் கிடைக்கிறது. எனது குடும்பத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் நான் சாகுபடி செய்துள்ள விவசாய நிலத்தில் இருந்து கிடைத்து வருகிறது. சீரகம், கடுகு, சோப்பு உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டும்தான் நாங்கள் கடைகளில் வாங்குகிறோம். இதனால் பெரிய அளவில் எங்களுக்கு அன்றாட செலவுகள் மிச்சமாகிறது’’ எனக் கூறும் சாலமோன் ஜீவாவின் முகம் மகிழ்ச்சியால் மினுங்கியது.
தொடர்புக்கு:
சாலமோன் ஜீவா: 94874 82379.

குமரி மாவட்டத்தில் கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்வது வழக்கம். தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பிறகு நிலத்தில் தண்ணீர் தேங்கி நின்று ஈரம் நிலைத்திருக்கும் என்பதால் வெள்ளரி, பூசணிக்காய், தடியங்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்யமாட்டார்கள். ஆனால் பேராசிரியர் சாலமோன் ஜீவா இந்த முறை இந்த சீசனில் காய்கறி சாகுபடி செய்ய முடிவு செய்திருக்கிறார். தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வெள்ளரி சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள சாலமோன் ஜீவா “ எனது வயல் உயர்ந்த பகுதி என்பதால் வயலில் தேங்கும் மழைநீர் எளிதாக வெளியேறிவிடும். இந்த வடிகால் வசதியைப் பயன்படுத்தித்தான் வெள்ளரி சாகுபடி செய்ய முடிவு செய்திருக்கிறேன்’’ என தெளிவாகப் பேசுகிறார்.

 

The post தர்பூசணி, வெள்ளரி, வேர்க்கடலை…கலக்கலான விளைச்சல் எடுக்கும் கல்லூரிப் பேராசிரியர்! appeared first on Dinakaran.

Read Entire Article