வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த புதுவரவு!

7 hours ago 3

பல வெளி மாநிலங்களில் மட்டும் பயிரிடப்படும் சில பயிர்கள் அவ்வப்போது நம்மூரில் பயிரிடப்பட்டு ஹிட் அடிக்கும். அந்த வகையில் உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஜாம் மற்றும் பல வகையான மருந்துகள் தயாரிப்புக்காக பயிரிடப்படும் ஜாம் புளிச்சக்காய் தற்போது நம்மூரிலும் வெற்றிகரமாக பயிரிடப்பட்டு விளைச்சல் கண்டு வருகிறது. விருத்தாசலம், விழுப்புரம், சேலம் போன்ற பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த ஜாம் புளிச்சக்காய் விவசாயம் கொடிகட்டி பறக்கிறது. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகாமையில் உள்ள தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி – அங்கப்பன் தம்பதியினர் தங்களது 50 சென்ட் நிலத்தில் ஜாம் புளிச்சக்காயை பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள். ஒரு காலைப்பொழுதில் அறுவடைப் பணிகளில் பரபரப்பாக இருந்த சுகந்தியைச் சந்தித்தோம். “ எங்களுக்குச் சொந்தமாக 50 சென்ட் நிலம் இருக்கிறது. அதில் நெல், உளுந்து, கம்பு என குறைந்தளவில் நிறைவான விவசாயம் செய்து வருகிறோம். சமீபத்தில் நண்பர் ஒருவர் ஜாம் புளிச்சக்காய் பற்றி கூறினார். இதை நாம் சாகுபடி செய்து பார்க்கலாமா? சாகுபடி செய்தால் பலன் கிடைக்குமா? என ஆரம்பத்தில் யோசித்தோம். சரி ஒருமுறை பயிரிட்டு பார்ப்போம் என துணிந்து சாகுபடியில் இறங்கி இருக்கிறோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. எங்கள் நிலத்தில் விதைத்த ஜாம் புளிச்சக்காய் தற்போது அறுவடைக்கு வந்திருக்கிறது’’ என ஜாம் புளிச்சக்காய் பற்றி ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தவர் மேலும் ெதாடர்ந்தார்.

“ மற்ற பயிர்களைப் போலவே ஜாம் புளிச்சக்காய் சாகுபடியும் எளிதானதுதான். இது எல்லா மண்ணிலும் நன்றாக வளரும். 90 நாட்களில் சாகுபடி முடிந்துவிடும். 3 மாதப் பயிர் என்பதால் விரைவில் வருமானம் பார்க்கலாம். காய்கறி, கீரைகளை விதைப்பது போல இதை விதைப்பு செய்யலாம். விதைப்பதற்கு முன்பு முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்துகொள்ள வேண்டும். அதாவது விதைக்கத் தேர்ந்தெடுத்திருக்கிற நிலத்தை ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு உழ வேண்டும். அதன்பின் அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் தொழுஉரம் கொடுக்கலாம். தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் டிஏபி உரம் கொடுக்கலாம். அதன்பின் விதைகளை விதைக்க வேண்டும். விதைகளை நிலத்தில் தூவிய பிறகு ரொட்டவேட்டர் மூலம் நிலத்தை ஒருமுறை உழுதால் நிலத்தின் மேல் உள்ள விதைகள் 3 அங்குல அளவிற்கு மண்ணிற்குள் புதைந்துவிடும். அதன்பிறகு நிலத்தில் நன்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையில் விதைக்கும்போது ஒரு ஏக்கருக்கு நான்கு கிலோ விதைகள் தேவைப்படும். நான் 50 சென்டில் பயிரிடுவதால் எனக்கு 2 கிலோ விதைகளே போதுமானதாக இருந்தது. ஒரு கிலோ விதையை ரூ.750க்கு வாங்கினேன். அந்த வகையில் விதைக்கு மட்டும் ரூ.1500 செலவு செய்தேன்.

விதைத்த மூன்றாம் நாளே விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் 4ம் நாள் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் நிலத்தில் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் கொடுக்கலாம். விதைத்து 15வது நாளில் ஒரு களையும், 30வது நாளில் இரண்டாவது களையும் எடுத்தாலே போதுமானது. இந்த செடியானது 4.5 அடியில் இருந்து 6 அடி வரை வளரும். ஒரு செடியில் 60 முதல் 70 ஜாம் புளிச்சக்காய்கள் முளைக்கும். செடி மற்றும் காயின் வளர்ச்சிக்காக 30வது நாள் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ யூரியா கொடுத்தால் போதுமானது. நான் 50 சென்டில் பயிரிட்டிருப்பதால் குறைந்தளவு யூரியா கொடுத்தேன். இப்படி வளர்கிற செடியில் இருந்து 45வது நாள் மொக்கு வைக்கத் தொடங்கும்.

சரியாக 70வது நாளில் எல்லா செடிகளிலும் மொக்கு பெரிதாகி காய் வந்துவிடும். 80வது நாளில் இருந்து இந்தக் காய்களை அறுவடை செய்யத் தொடங்கலாம். இந்த ஜாம் புளிச்சக்காயை பொருத்தவரை, ஒரு ஏக்கருக்கு 6 டன் காய்கள் வரை அறுவடை எடுக்கலாம். அறுவடை செய்யப்படும் காய்களுக்குள் 10 முதல் 20 விதைகள் இருக்கும். இந்த விதைகளை காய்களில் இருந்து பிரித்தெடுத்து இரண்டு நாள் காய வைப்போம். அவ்வாறு காய வைக்கும்போது ஏக்கருக்கு ஒன்றரை டன் காய்ந்த விதைகள் கிடைக்கும். காய்ந்த விதை அளவுக்கு தோல் பகுதியும் நமக்கு கிடைக்கும். அதாவது ஒன்றரை டன் விதை கிடைத்தால் ஒன்றரை டன் தோலும் கிடைக்கும். இவற்றை நாம் தனித்தனியே விற்பனை செய்யலாம். காய வைத்த ஜாம் புளிச்சக்காய், அதாவது சிவப்பு நிறத்தில் உள்ள தோல் பகுதி ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை ஆகிறது. காயில் இருந்து பிரித்தெடுத்த விதைகள் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனை ஆகிறது.

ஜாம் புளிச்சக்காய் (தோல் பகுதி) ஜாம் தயாரிக்கவும், மருந்துகள் தயார் செய்யவும் வாங்கிச் செல்லப்படுகிறது. அதன் விதைகள் மருந்து தயாரிப்போடு, மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது நாங்கள் ஜாம் புளிச்சக்காய் அறுவடையைத் தொடங்கி இருக்கிறோம். 50 சென்ட் நிலத்தில் எங்களுக்கு 400 கிலோ காய வைத்த காய்களும் (தோல் பகுதி), 200 கிலோ விதைகளும் கிடைத்திருக்கின்றன. முதல்முறை சாகுபடி என்பதாலும், சமீபத்தில் பெய்த மழையினாலும் எங்களுக்கு மகசூல் கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் காய் மற்றும் விதைகளில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
சுகந்தி: 99446 14487
இளையராஜா: 98658 90966.

ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் ஜாம் புளிச்சக்காய் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, அதன் விளைச்சலையும் பை பேக் முறையில் பெற்றுக்கொள்கிறார். இதுகுறித்து இளையராஜா கூறுகையில், “ ஜாம் புளிச்சக்காய் அனைத்து நிலத்திலும் நன்றாக வளரும். ஒரு ஏக்கர் இதை சாகுபடி செய்தால் 1.5 டன் வரை காய்ந்த காய்களும், 1.5 டன் விதைகளும் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் ஒரு ஏக்கரில் 1.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார்.

ஜாம் புளிச்சக்காய் சாகுபடியில் இரண்டு அனுகூலங்கள் விவசாயிகளுக்கு உண்டு. ஒன்று, இந்தச் செடியை ஆடு, மாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சீண்டவே சீண்டாது. இந்தச் செடியின் வாசமும், காயின் சுவையும் அவற்றுக்கு அறவே பிடிக்காது. இன்னொன்று, ஜாம் புளிச்சக்காய் செடிகளில் நோய் தாக்குதல் என்பது 95 சதவீதம் இல்லவே இல்லை என்பதுதான்.

50 சென்ட் நிலத்தில் முதல்முறையாக ஜாம் புளிச்சக்காயை சாகுபடி செய்திருக்கும் சுகந்தி விதை, உழவு, உரம், களை பறிப்பு, அறுவடை என அனைத்திற்கும் சேர்த்து ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார். ஆனால் 50 ஆயிரம் ரூபாய்க்கு வொர்த்தாக விளைச்சல் கிடைத்திருக்கிறது.

The post வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த புதுவரவு! appeared first on Dinakaran.

Read Entire Article