மஞ்சூர், அக்.14: மஞ்சூரில் மீண்டும் தேயிலை வாரிய அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.தென்னிந்திய தேயிலை வாரியத்தின் தலைமை அலுவலகம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்த அலுவலகங்கள் மூலம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பல்வேறு பயன்களை அடைந்து வந்தனர். குறிப்பாக, மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் மட்டும் சுமார் 10ஆயிரம் ஹெக்டருக்கும் மேல் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை வாரிய அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தேயிலை வாரியத்தின் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள், அனைத்தும் மண்டல அலுவலகத்தின் மூலம் எளிதாக கிடைத்து வந்தது. மேலும் அந்தந்த காலநிலைக்கேற்ப தேயிலை சாகுபடி மேற்கொள்வது குறித்து கள அலுவலர்கள் மூலம் அவ்வப்போது பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சூரில் செயல்பட்டு வந்த தேயிலை வாரியத்தின் மண்டல அலுவலகம் மூடப்பட்டது.
இதனால், தேயிலை வாரிய திட்டங்களை இதுவரை உள்ளூரிலேயே பெற்று வந்த விவசாயிகள் பெரிதும் அவதிகுள்ளாகியுள்ளனர். தேயிலை வாரிய பயன்களை பெற குன்னுாரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன் கூடுதல் செலவீனம், காலவிரயத்துடன் ஏற்படுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குந்தா பகுதியை சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள் நலன் கருதி மஞ்சூர் பகுதியில் மீண்டும் தேயிலை வாரிய அலுவலகம் திறக்க வேண்டும். தேயிலை வாரியத்தின் அனைத்து பயன்கள், சலுகைகள் விவசாயிகளுக்கு சிரமம் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தென்னிந்திய தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
The post மஞ்சூரில் தேயிலை வாரிய மண்டல அலுவலகம் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.