மாதவரம்: நண்பரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொடுங்கையூர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் அருண் (20). லோடு வேன் டிரைவர். இவரும், புழல் காரனோடை வி.ஜி.பி.மேடு பகுதியைச் சேர்ந்த விஜி (எ) விஜயகுமாரும் (27) நண்பர்கள். இந்த நிலையில், அருணை மச்சான் என்று விஜயகுமார் அழைத்துள்ளார். அருணுக்கு சகோதரிகள் இருப்பதால், தன்னை மச்சான் என்று அழைக்க வேண்டாம் என்று விஜயகுமாரிடம் கூறியுள்ளார்.
இதனால், அருண் மீது விஜயகுமாருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2014 அக்டோபர் 12ம் தேதி அருணின் வீட்டுக்கு சென்ற விஜயகுமார், அருணை மச்சான் என்று அழைத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயகுமார், அருணை தாக்கி, அவர் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் அருண் படுகாயமடைந்து பின்னர் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கொடுங்கையூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எஸ்.தனசேகரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் விஜயகுமாருக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post மச்சான் என்று சொல்லக்கூடாது என கண்டித்ததால் நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.