சென்னை: பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு, உண்மையான காரணம் என்ன? என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறவும், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விதத்தில், பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்பிக்கள் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்புகிறது. அதன்படி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி தலைமையில், ஒரு குழு வெளிநாடுகளுக்கு செல்கிறது. அதற்காக கனிமொழி எம்பி, நேற்றிரவு 9 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை திமுக மகளிர் அணி சார்பில் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது கனிமொழி எம்பி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா பாகிஸ்தான் இடையே, நடைபெற்ற பிரச்சனைகள் தொடர்பாக, நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் பேசுவதற்கும், தீவிரவாத செயல்களால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி கூறுவதற்கும், இந்திய அரசு, பல நாடுகளுக்கு நமது நாட்டின் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறது. ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். இதற்கு இந்திய அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
The post இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு : உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.