சென்னை: இறந்து போன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது இயலாதது என்று ஒன்றிய அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அந்த நபரின் கைரேகை மூலம் விவரங்களை வழங்க ஆதார் அமைப்புக்கு உத்தரவிடக் கோரி திண்டிவனம் டி.எஸ்.பி. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் அமைப்பின் துணை இயக்குனர் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆதார் தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. அரசின் மானியம் உரிய முறையில் செல்வதை உறுதி செய்வதே ஆதாரின் முக்கிய நோக்கம். தனி நபரின் நடவடிக்கையை கண்காணிப்பது அல்ல. எந்த காரணத்திற்காகவும் தனிப்பட்ட நபரின் தகவல்கள் பகிரப்படாது. உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ உத்தரவிட்டால் அந்த நபரின் கருத்தை கேட்ட பின்னரே விவரங்கள் பகிரப்படும். இறந்த போன நபரின் கைரேகையை ஆதார் கைரேகையுடன் ஒப்பிட்டு தகவல்களை வழங்குவது இயலாதது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
The post இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.