சென்னைக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

4 hours ago 2

புதுடெல்லி: ஐபிஎல் 18வது தொடரின் 62வது லீக் போட்டி புதுடெல்லியில் நேற்று நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை அணியின் துவக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே களமிறங்கினர். யுத்வீர் சிங் வீசிய 2வது ஓவரில் டெவான் கான்வே 10 ரன்னிலும், உர்வில் படேல் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து அஸ்வின் களமிறங்கினார். ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய மாத்ரே, 43 ரன் (20 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆவுட்டானார். தொடர்ந்து, அஸ்வின் 13 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 1 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் 5 விக்கெட் இழந்து 78 ரன் மட்டுமே எடுத்து சென்னை அணி தடுமாறியது.

இதையடுத்து, டெவால்ட் புரூவிஸ்- சிவம் துபே ஜோடி சிறப்பாக ஆடி 59 ரன்கள் குவித்த நிலையில், புரூவிஸ் 42 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) என்று ஆட்டமிழந்தார். அடுத்து, துபேவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இவர்கள் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி, 43 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் சிவம் துபே 39 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 16 ரன் (17 பந்து) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில், சென்னை, 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில், யுத்வீர் சிங், ஆகாஷ் மத்வால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 37 ரன் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சூர்யவன்ஷியுடன் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை பந்தாடினர். இந்த ஜோடி 98 ரன் சேர்த்த நிலையில், சாம்சன் 41 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யவன்ஷி 57 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்த வந்த ரியான் பராக் 3 ரன்னில் நடையை கட்ட, ஜூரல் – ஹெட்மயர் ஜோடி அதிரடியாக விளையாடி 17.1 ஓவரில் 188 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜூரல் 31 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 12 ரன் (5 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

The post சென்னைக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article