மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்.. போலீஸ் துப்பாக்கி சூடு: உ.பி.யில் பதற்றம்

3 hours ago 1

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் ஷாஜி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி இந்த குழுவினர் இன்று காலையில் மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். பாதுகாப்புக்காக போலீசாரும் சென்றனர். அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் உருவானது.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.  அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 நபர்களுக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இன்று வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 19-ம் தேதியும் பலத்த பாதுகாப்புடன் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மசூதி நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article