லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் ஷாஜி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி இந்த குழுவினர் இன்று காலையில் மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். பாதுகாப்புக்காக போலீசாரும் சென்றனர். அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கிடையில் தீபா சராய் என்ற பகுதியில் துப்பாக்கியால் சுட்ட சத்தங்கள் கேட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் இன்று போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் நயீம், பிலால் மற்றும் நவுமன் ஆகிய 3 பேர் பலியானதாக மொரதாபாத் கமிஷனர் ஆஞ்சநேயா குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், போராட்டத்தின்போது துப்பாக்கியை பயன்படுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.