
திருச்சூர்,
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெண்டூர் பகுதியை சேர்ந்தவர் ஹென்றி (வயது 42). இவரது மகள் ஒலிவியா (3). ஹென்றி வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த 19-ந் தேதி வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சொந்த ஊர் வருவதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவரை, அவரது மனைவி மற்றும் தாய், ஒலிவியா ஆகிய 3 பேர் அழைத்து வந்தனர்.
அப்போது வரும் வழியில் அங்கமாலி அருகே உள்ள ஒரு ஓட்டலில் 4 பேரும் மசால் தோசை சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து வீடு திரும்பிய பின்னர் ஹென்றிக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதை தொடர்ந்து ஹென்றியின் மனைவி, தாய், ஒலிவியா ஆகிய 3 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றாலும், சிறுமிக்கு உடல்நிலை மோசமடைந்தது. வெண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஒலிவியா பரிதாபமாக உயிரிழந்தாள். இதை அறிந்த புதுக்காடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.