மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.சி. ரோடு பகுதியில் விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 17ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் முகமூடி அணிந்து வந்த நான்கு நபர்கள் அங்கிருந்த வங்கி ஊழியர்கள் ஐந்து பேரை அரிவாள், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி சுமார் ரூ4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த உல்லால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 8க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின்நெல்லை மாவட்டம் பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி(36) என்பவரை களக்காட்டில் கைது செய்தனர்.
இவர் மங்களூரு வங்கியில் பணத்தை வங்கியில் கொள்ளையடித்துவிட்டு கேரளா வழியாக தமிழகத்தின் திருநெல்வேலிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இவரிடமிருந்து, 2 கிலோ தங்கம், ரூ3 லட்சம், மும்பை பதிவெண்கொண்ட பியட்கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு துப்பாக்கி, மூன்று குண்டுகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மங்களூரு அழைத்து வரப்பட்டார். மேலும் மேற்கு மும்பை டோம்பிவிலி, யோசுவா ராஜேந்திரன், மும்பை செம்பூர் திலக் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்மணி ஆகியோரை கைது செய்துள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தெரிவித்திருந்தார். கைதான நபர்களிடமிருந்து ரொக்க பணம் இரண்டு மூட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் முக்கிய குற்றவாளியாக முருகாண்டி தேவர் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்துள்ளது. மற்ற இருவரும் மும்பையில் வசித்தாலும் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், மங்களூருக்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, நேற்று, மாலை 4:20 மணியளவில் போலீசார் மற்றும் புலனாய்வுக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் மணி போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றார். மேலும் அந்த இடத்தில் கிடைத்த உடைந்த பீர் பாட்டிலைப் பயன்படுத்தி, போலீசார்கள் அஞ்சனப்பா மற்றும் நிதின் ஆகியோரை தாக்கினார். விசாரணை அதிகாரியான உல்லால் போலீஸ் பரிசோதகரையும் தள்ளிவிட்டு அவரை கத்தியால் குத்த முயன்றார்.
உடன் வந்த சிசிபி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி எச்சரிக்க துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றார். இதையடுத்து பதிலுக்கு, சிசிபி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மணியின் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து விழுந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தின் போது இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் காயம் அடைந்தனர். காயமடைந்த போலீசார் மற்றும் குற்றவாளிகள் தெரலகட்டேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் நெல்லையை சேர்ந்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த கர்நாடக போலீசார்: தப்பியோட முயன்றதால் அதிரடி appeared first on Dinakaran.