*நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் தங்கவேல் தகவல்
கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் தங்கவேல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது துறைரீதியாக ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை வந்து, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை மனுக்களும், கனிவுடன் பெறப்பட்டு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவுகளை வழங்கி வருகிறார். இதனடிப்படையில், அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கையுடன் வந்து இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாரத்திற்கான மக்கள்குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர கோரிக்கைகள் கேட்டு மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 47 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு காதொலி கருவி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் ரூ. 24,585 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளையுடைய ஒரு தம்பதியர் கடந்த வாரம் அளித்த மனு மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு பயனாளியின் பங்கு தொகையை தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரின் ரூ. 1,18,000 உதவியுடன் ரூ. 8,67,000 மதிப்பிலான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பில் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும் கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
தொடர்ந்து, 2025ம் ஆண்டு தேசிய திறனாய்வு போட்டித் தேர்வில் உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஆச்சிமங்கலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி ஷர்மதாவை பாராட்டி புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீ, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரவணன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை appeared first on Dinakaran.