மக்களுக்கான அரசு

1 week ago 4

முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் மருத்துவமனைகளில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது.

சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாடுகளால் பின்தங்கி உள்ள மலைக்கிராமங்களில் கூட இன்றைக்கு மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்கும் நிலை உள்ளது. தமிழ்நாடு ஒரு வலுவான பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் திறமையான மனித வளங்களைக் கொண்டுள்ளது. இது அனைத்து முக்கிய சுகாதாரக் குறியீடுகளிலும் மாநிலத்தை உயர் தரவரிசையில் நிலைநிறுத்த குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பை வழங்கியுள்ளது.

மாநிலத்தின் முன்னோடி சுகாதாரத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள், மாநிலத்திற்குள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பாராட்டை பெற்று, மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளன. இத்திட்டங்கள் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கோடிட்டு காட்டுகிறது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு சுகாதார மற்றும் மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் மக்களை தேடி மருத்துவம் திட்டமானது மகத்தான திட்டமாக வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 7ம் தேதி வரை 1 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரம் பயனாளிகள் முதன்முறை மருத்துவ சேவைகளையும், 4 கோடியே 22 லட்சத்து 79 ஆயிரம் பயனாளிகள் தொடர் மருத்துவ சேவைகளையும் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டினை தாண்டி இந்திய துணை கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக, தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரமும், விருதும் தேடிவந்துள்ளது.

தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024ம் ஆண்டுக்கான டாஸ்போர்ஸ் விருது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் உட்பட தொற்றா நோய்கள் மற்றும் மனநலம் தொடர்பான சிறந்த பணிகளை அங்கீகரித்து தமிழ்நாடு அரசுக்கு இந்த விருது வழங்கி ஐ.நா. சபை கவுரவித்துள்ளது.

வழக்கமாக மக்கள் மருத்துவமனைகளை நாடிச் சென்ற நிலை மாறி தற்போது மருத்துவத்துறையே மக்களின் வீடுகளை தேடிச்செல்லும் அளவுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறையில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஒப்பீடு செய்யக்கூடிய வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை விஞ்சும் வகையில், தமிழ்நாடு சுகாதாரக் குறியீடுகளை கொண்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மூலம் சுகாதார சேவைகளை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது என்பது அரசு மருத்துவமனைகள் வழங்கி வரும் சேவையில் பொதுமக்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே காட்டுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதோடு சேவையை உறுதி செய்துள்ளதற்காக வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் தான் ஐ.நா. அளித்துள்ள விருது.

The post மக்களுக்கான அரசு appeared first on Dinakaran.

Read Entire Article