*கலெக்டரிடம் பூதலப்பட்டு எம்எல்ஏ மனு
சித்தூர் : சித்தூர் பூதலப்பட்டு தொகுதியின் நிலப்பிரச்சினைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூர் கலெக்டரிடம், எம்எல்ஏ பொதுமக்களுடன் வந்து மனு அளித்தார்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுமித்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பூதலப்பட்டு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ முரளிமோகன் தலைமையில் பொதுமக்கள் வந்து, கலெக்டர் சுமித் குமாரிடம், கோரிக்கை மனு அளித்தார். பின்னர் கலெக்டரிடம் எம்எல்ஏ தெரிவித்ததாவது:
பூதலப்பட்டு தொகுதி, தவணம்பள்ளியில் உள்ள ஏ.கொல்லப்பள்ளி எஸ்சி காலனியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை கிராமத்தில் வசிப்பவர்களின் வீடுகளுக்கு அரசு பட்டா மற்றும் பாஸ்புத்தகம் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அவர்களின் சந்ததியினர் எதிர்காலத்தில் வீடுகளின் மீதான உரிமைகளை மாற்றுவதில் சிரமங்களை எதிர் கொண்டு வருகிறார்கள்.
மாநில அரசு நில விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வரும் நேரத்தில், கிராம மக்களின் நில விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து அவர்களுக்கு உதவி வழங்க வேண்டும். சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, 20 முதல் 25 நாட்களுக்குள் பிரச்சினையை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பங்காரு பாளையம் மண்டல மையத்தில் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு நிலம் இல்லாததால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
ஆகவே சுடுகாடு அமைப்பதற்கு நிலம் ஒதுக்க வேண்டும். மயானம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை வாங்குவதற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் கோரிக்கை வைத்தார்.அதற்கு கலெக்டர் சுமித் குமார், ‘எம்எல்ஏ தெரிவித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு விரைவில் கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலத்தையும், நகர்ப்புறங்களில் 2 சென்ட் நிலத்தையும் வழங்க வேண்டும் என்றும், வீடுகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்க வேண்டும். ஆகவே பூதலப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் பிரச்சனைகளை ஓரிரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பதாக எம்எல்ஏ முரளி மோகனிடம் உறுதி அளித்தார்.
இதில் சட்டமன்ற தொகுதி மக்கள் இருந்தனர்.இதில் மாவட்ட இணை கலெக்டர் வித்யாதாரி, டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
421 மனுக்கள் மீது உடனடி விசாரணை
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மொத்தம் 421 பேர் தங்களின் குறைகளை மனுவாக எழுதி வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சுமித் குமார், ‘சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும், பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தி, ஓரிரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
The post மக்களின் நிலப்பிரச்னைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை appeared first on Dinakaran.