மக்களிடம் செல்வாக்கை இழந்ததால் 9 பாஜக அமைச்சர்கள் சபாநாயகர் படுதோல்வி: அரியானாவில் 3வது முறையாக ஆட்சியை பிடித்தும் கவலை

1 month ago 7

சண்டிகர்: அரியானா மக்களிடம் செல்வாக்கை இழந்ததால் மாநிலத்தில் 9 பாஜக அமைச்சர்கள், சபா நாயகர் ஆகியோர் படுதோல்வியை சந்தித்தனர். 3வது முறையாக ஆட்சியை பிடித்தும் மூத்த தலைவர்கள் கவலையடைந்துள்ளனர்.  அரியானாவில் ஆட்சிக்கு எதிரான கடும் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் ஆதரவு அலை போன்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை மீறி பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், முதல்வர் நயாப் சிங் சைனியின் அமைச்சரவையில் இருந்த ஒன்பது அமைச்சர்களும், சட்டசபை சபாநாயகரும் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தனர். மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தாலும், முக்கியத் தலைவர்களின் தோல்வி மாநிலத்தில் பாஜகவுக்கு பலத்த  அடியாக மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதையும், பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து மக்கள் விலகிச் செல்வதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

முன்னாள் எம்பியும், மாநில மின்துறை அமைச்சருமான ரஞ்சித் சிங், ரானியா தொகுதியில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இங்கு இந்திய தேசிய லோக்தளத்தின் அர்ஜூன் சவுதாலா வெற்றி பெற்றார். கடந்த 2014 முதல் 2019 வரை சபாநாயகராகவும், மாநில அமைச்சராகவும் இருந்த கன்வர்பால் குஜ்ஜர், ஜகத்ரி தொகுதியில் தோல்வியை தழுவினார்.

காங்கிரஸின் அக்ரம் கான் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மற்ற அமைச்சர்களான சுபாஷ் சுதா (தனேஷ்வர் தொகுதி), ஜெயபிரகாஷ் தலால் (லோஹாரு), அபேசிங் யாதவ் (நாங்கல்), சஞ்சய் சிங் (நூஹ்), கமல் குப்தா (ஹிசார்), அசீம் கோயல் (அம்பாலா நகரம்), கியான் சந்த் குப்தா (பஞ்ச்குலா) ஆகிய 9 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். இவர்களில் சஞ்சய் சிங் மற்றும் கமல் குப்தா ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

கடந்த 2014 மற்றும் 2019ல் பஞ்ச்குலாவில் வெற்றி பெற்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா, இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சந்திரமோகனிடம் தோல்வியடைந்தார். சந்திரமோகன் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் ஆவார். அரியானா தேர்தலில் பாஜக பல்வேறு முறைகேடு செய்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேநேரம் தோல்வியை தழுவிய காங்கிரசை பாஜக தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.

The post மக்களிடம் செல்வாக்கை இழந்ததால் 9 பாஜக அமைச்சர்கள் சபாநாயகர் படுதோல்வி: அரியானாவில் 3வது முறையாக ஆட்சியை பிடித்தும் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article