** தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகம் புறக்கணிப்பா?
* செங்கோட்டையன், ஜெயக்குமாரை தொடர்ந்து போர்க்கொடி
மதுரை: அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பின் போது, மேடையில் ஏறிய தன்னை கீழே இறக்கி விட்டதால் எடப்பாடி மீது அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் அதிருப்தியடைந்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் உதயகுமார். கடந்த அதிமுக ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்தார். கட்சி தலைமை பொறுப்புக்கு யார் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கு ஏற்ப அவர்களிடம் தனது விசுவாசத்தை காட்டுவதில் உதயகுமார் வல்லவர். தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களை ஆதரித்து கருத்து தெரிவிப்பதில், கட்சியிலேயே முதல் ஆளாக இருப்பவர் உதயகுமார்.
விசுவாச குமாரு…
டாக்டர் வெங்கடேசுடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலம் சசிகலா குடும்பத்தில் நெருக்கத்தை வளர்த்துக் ெகாண்டார். பின் அதிமுகவில் தனக்கென ஒரு இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது காலில் செருப்பு அணியாமல் ‘விசுவாசத்தை’ காட்டினார். இதேபோல், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, என காலமாற்றத்திற்கு ஏற்ப தனது ஆதரவுக் குரலை உயர்த்தி பேசி வந்தவர், கட்சிக்குள் சூழல் மாறுவதை சரியாகக் கணித்து, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை விசுவாசியாக மாறினார்.
சமுதாய ஓட்டு சரிவு
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்சை ஓரங்கட்டிய பின்பு, எடப்பாடி தரப்பிற்கு முக்குலத்தோர் சமுதாய ரீதியாக போதிய ஆதரவு இல்லை. இதனால் தென்மாவட்டங்களில் அதிமுக செல்வாக்கு கடுமையாக சரியத் தொடங்கியது. இதை சரிக்கட்ட தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய பிரதிநிதியாக உதயகுமாரை காட்ட நினைத்த எடப்பாடி, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
தென்மாவட்ட அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ போன்றோர் இருந்தாலும் உதயகுமாருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் உதயகுமாரின் விசுவாசத்திற்கு பரிசு கொடுக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற துணைத்தலைவராகவும் ஆக்கினார்.
எடப்பாடியுடன் நெருக்கம்
கூட்டணிக்காக அதிமுகவிற்கு பாஜ நெருக்கடி கொடுப்பதாக ெபாதுவெளியில் பேச்சு எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், மாநில நலன்சார்ந்த கோரிக்கைகளுக்காக சந்தித்து பேசியதாகவும் கூறினார். நள்ளிரவு சந்திப்பு நிகழ்ந்த நிலையில், விடிந்ததும் உதயகுமார் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது வழக்கமான பாணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என புகழ்ந்து பாஜவினரை ஒற்றை வரியில் உச்சி குளிரச் செய்தார்.
மரியாதை குறைவு
அதிமுக – பாஜ கூட்டணியை உறுதி செய்யும் வகையில் சென்னையில் நடந்த அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பில் தன்னை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டு, வழக்கம்போல கொங்கு பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் எடப்பாடி ேமடை ஏற்றியதாக கூறி உதயகுமார் தற்போது அதிருப்தியில் இருப்பதாக மதுரை மாவட்ட கட்சியினர் மத்தியில் பரபரப்பு பேச்சு ஓடுகிறது. அன்றைய தினம் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பிற்காக எடப்பாடியுடன், வேலுமணி, முனுசாமி மற்றும் உதயகுமார் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர். ஆனால், மேடையில் போதிய நாற்காலி இல்லை எனக்கூறி தன்னுடன் இருந்த வேலுமணி, முனுசாமியை மேடை ஏற்றிய எடப்பாடி, உதயகுமாரை கீழே இருக்குமாறு கூறி விட்டார். இதை சற்றும் எதிர்பாராத உதயகுமார் பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் சந்தித்துள்ளார். அதிமுக சட்டமன்ற துணைத்தலைவரான தனக்கே மேடையில் சீட் இல்லையா என கடும் அதிருப்தியடைந்த உதயகுமார், நிகழ்ச்சி நடந்த ஓட்டலில் இருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி சென்றுள்ளார்.
விருந்திலும் ஆப்சென்ட்
அன்று மாலை எடப்பாடி வீட்டில் அமித்ஷாவிற்கு கொடுக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் உதயகுமார் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விருந்திற்கும் எடப்பாடி தரப்பில் இருந்து உதயகுமாருக்கு முறையான அழைப்பு வரவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரோ, எடப்பாடி தொடர்ந்து தென்மாவட்டங்களையும், முக்குலத்தோர் சமுதாயத்தினரையும் திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகவும், தான் சார்ந்த கொங்கு மண்டலத்தையும், குறிப்பிட்ட அவரது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதாகவும்கருதுகின்றனர்.
ஆதரவாளர்கள் கொதிப்பு
அதிமுக பிளவுபட்ட ேபாதும், பாஜ கூட்டணியில் இருந்து விலகிய போதும், மீண்டும் பாஜ ஆதரவு நிலை வந்தபோதும் முதல் ஆளாய் எடப்பாடியின் பின்னால் நின்ற உதயகுமாருக்கே எடப்பாடி ஆப்பு வைப்பதாகவும், தன்னை தவிர வேறு யாரையும் கட்சியில் முன்னிலைப்படுத்த விரும்பாமல் தான் இதுபோன்ற நிகழ்வுகளை எடப்பாடி திட்டமிட்டு நிறைவேற்றி வருவதாகவும், உதயகுமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. எடப்பாடியை வெளிப்படையாக யாரும் ஆதரிக்க தயாராக இல்லாதபோதே, தான் முதல் ஆளாய் ஆதரித்ததாகவும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னை எடப்பாடி திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகவும் எடப்பாடி மீது உதயகுமார் மன வருத்தம் அடைந்து தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எடப்பாடியின் தொடர் நடவடிக்கைகளை பொறுத்து, முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கி தனியாக செயல்பட்டு வருகிறார். இதேபோல், எடப்பாடியின் குரலாக ஒலித்து வந்த ஜெயக்குமாரும், அதிமுக-பாஜ கூட்டணி அமைந்ததால் அதிருப்தியில் மவுனமாக இருந்து வருகிறார். இந்த சூழலில் எடப்பாடிக்கு எதிராக உதயகுமாரும் போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அமித்ஷா சந்திப்பு மேடையிலிருந்து கீழே இறக்கியதால் கடும் மன உளைச்சல்: ஓரங்கட்டிய எடப்பாடி.. புலம்பும் உதயகுமார் appeared first on Dinakaran.