மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு பின் நள்ளிரவில் நிறைவேற்றம்: மதத்திற்கு சம்மந்தமில்லை என அரசு பதில்

18 hours ago 2

டெல்லி: சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதா நாட்டை பிளவுபடுத்தும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா சொத்துக்களை நிர்வகிப்பது பற்றியது மட்டுமே தவிர, மதத்திற்கு சம்மந்தமில்லை என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. காரசாரமான விவாதம் இரவு வரை பரபரப்பாக நீடித்த நிலையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் பரிந்துரைப்படி மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

வரும் 4ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைவதால், இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா மீது தலா 8 மணி நேரம் விவாதம் நடத்த நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தாக்கல் செய்தார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கொறடாக்கள் உத்தரவின் பேரில் அனைத்து கட்சி எம்பிக்களும் அவையில் முழுமையாக ஆஜராகி இருந்தனர். பகல் 12 மணிக்கு மசோதா மீதான காரசார விவாதம் தொடங்கியது.

காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த மசோதா அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்தல், சிறுபான்மை சமூகங்களை அவதூறு செய்தல், இந்திய சமூகத்தைப் பிரித்தல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்தல் ஆகிய 4 விஷயங்களை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே இது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல். கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல். இந்த மசோதாவின் பிரிவு 3ன்படி, சிறுபான்மையினர் இப்போது தங்கள் மத அடையாளத்தை சான்றிதழ்களுடன் நிரூபிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். நாளை, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இதைச் செய்ய நிர்பந்திக்கப்படுவார்களா? இது அரசியலமைப்பின் 26வது பிரிவுக்கு எதிரானது. இன்று சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். நாளை மற்றவர்கள் குறிவைக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘வக்பு மசோதா பாஜவின் மதவாத அரசியலின் புதிய வடிவம். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிர் பலிகள், இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனா போன்ற விவகாரங்களை மறைக்க இந்த மசோதவை கொண்டு வந்துள்ளனர். சமூகங்கள் இடையே பகையை மூட்டுவது தான் பாஜவின் திட்டம். இது கோடிக்கணக்கான மக்களின் நிலங்களையும் வீடுகளையும் அபகரிக்கும் சதி. பாஜ ஒரு ஜனநாயக விரோதக் கட்சி. இது பாஜவுக்கு இறுதிகட்ட அழிவைத் தரும்’’ என்றார்.

திமுக எம்பி ஆ. ராசா பேசுகையில், ‘‘வக்பு மசோதா விவகாரத்தில் உள்ள முழுமையான உண்மைகளை மறைத்து ஒன்றிய அமைச்சர் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் இந்து அறநிலைய துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. ஒட்டுமொத்த வக்பு சொத்துக்களையும் ஒன்றிய பாஜ அரசு அபகரிக்க முயற்சிக்கிறது’’ என்றார்.

ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: இந்த சட்டத்திற்கும் மதத்திற்கும் சம்மந்தமில்லை. இது வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டது. வக்பு சொத்துக்களின் செயல்பாட்டை மேம்படுத்துதல், சிக்கல்களை நிவர்த்தி செய்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை மசோதா நோக்கமாக கொண்டுள்ளது.
இன்று நாட்டில் 3வது அதிக சொத்து வைத்திருக்கும் அமைப்பு வக்பு வாரியம். ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, இவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தும் அவர்கள் எந்தப் பலனும் பெறவில்லை. வக்பு சொத்துக்கள் சாதாரண, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதில் மிகப்பெரிய நிர்வாக குறைபாடுகள் இருந்துள்ளன.

2004ம் ஆண்டு நிலவரப்படி, மொத்தம் 4.9 லட்சம் சொத்துக்கள் வக்பு வசம் இருந்தன. அவற்றின் வருமானம் ரூ.163 கோடியாக இருந்தது. 2013 திருத்தத்திற்குப் பிறகு, வருமானம் வெறும் ரூ.3 கோடி அதிகரித்து ரூ.166 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் சொத்துக்களின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் அதிகம். இதிலிருந்தே நிர்வாக குறைபாட்டை அறியலாம். இவை திறமையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முழு நாட்டின் செல்வமும் மாறியிருக்கும். இந்த மாற்றத்தை அடுத்த ஓராண்டில் நீங்கள் பார்ப்பீர்கள். இது யாருடைய சொத்துக்களையும் பறிப்பதற்கான சட்டமல்ல. 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டபோது, முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும், அவர்களின் குடியுரிமைகள் பறிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் இதுவரை ஒருவரின் குடியுரிமை கூட பறிக்கப்பட்டதில்லை. வக்பு மசோதாவை யார் ஆதரிக்கிறார்கள், யார் எதிர்க்கிறார்கள் என்பதை நாடு பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினர்.

* வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
12 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது

* வதந்திகள் பரப்புகின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு
மக்களவை விவாதத்தில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘வாக்கு வங்கி அரசியலுக்காக, வக்பு மசோதா முஸ்லிம்களின் மத விஷயங்களிலும் அவர்கள் நன்கொடையாக வழங்கும் சொத்துக்களிலும் தலையிடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த மத விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களின் நிர்வாகத்தை மட்டுமே அவர்கள் உறுதி செய்வார்கள். அரசாங்க சொத்தை யாரும் நன்கொடையாக வழங்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மக்களை திருப்திபடுத்த வக்பு சட்டம் தீவிரமானதாக திருத்தப்பட்டது. அந்த திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த மசோதாவுக்கு அவசியம் இருந்திருக்காது’’ என்றார்.

* விவசாயிகளைப் போல நாடு தழுவிய போராட்டம்
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அலி மொஹ்சின் கூறுகையில், ‘‘விவசாயிகள் செய்தது போலவே, வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஏற்பாடு செய்வோம். தேவைப்பட்டால், சாலைகளை மறித்து, மசோதாவை எதிர்க்க அனைத்து அமைதியான நடவடிக்கைகளையும் எடுப்போம். நீதிமன்றங்களை நாடுவோம்’’ என்றார்.

கடந்து வந்த பாதை
* கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி மக்களவையில் வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
* ஆகஸ்ட் 22ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது.
* நவம்பர் 28ம் தேதி கூட்டுக்குழு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
* கடந்த பிப்ரவரி 13ம் தேதி கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
* பிப்ரவரி 27ம் தேதி கூட்டுக்குழு முன்மொழிந்த திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
* நேற்று (ஏப்ரல் 2) மக்களவையில் வக்பு திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்பட்டது.

வக்பு மசோதாவில் முக்கிய திருத்தங்கள்
* 1955ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டம், ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* வக்பு சட்டத்தில் இஸ்லாத்தை நம்பும் எவரும் தங்கள் சொத்துக்களை நன்கொடையாக அளிக்கலாம். வக்பு திருத்த மசோதாவில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றும் மற்றும் சம்மந்தப்பட்ட நிலத்தில் உரிமையுள்ளவர்கள் வக்புக்கு சொத்துக்களை நன்கொடை அளிக்கலாம். இதன் மூலம் வக்புக்கு நன்கொடை அளிப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
* அரசு நிலங்கள், வக்புக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டால் இதை முடிவு செய்வதற்கான முழு அதிகாரம் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இது தற்போது நீக்கப்பட்டுள்ளது. வக்பு திருத்த மசோதாவில் இந்த பிரச்னை கலெக்டரை விட உயர் அதிகாரி மூலம் விசாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி தீர்வு காணப்படும்.
* வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு தற்போது கலெக்டர் அல்லது துணை கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.
* மத்திய வக்பு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத 2 பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், போஹ்ரா மற்றும் அககானி சமூகத்தினருக்கென தனி வக்பு வாரியம் அமைப்பது குறித்தும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதை அந்த பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர்.
* ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் தரவுத்தளம் மூலம் வக்பு சொத்துக்களை பதிவு செய்ய திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் வக்பு சொத்து விவரங்களை அனைவரும் வெளிப்படையாக பார்க்க முடியும்.
* 3 உறுப்பினர்களைக் கொண்ட வக்பு தீர்ப்பாயமும் 2 உறுப்பினர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் சட்ட நிபுணர் நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட நீதிபதி தலைவராகவும், அரசின் இணை செயலாளர் உறுப்பினராகவும் தீர்ப்பாயத்தில் இருப்பார்கள் என வக்பு திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் இறுதியானதாகக் கருதப்படாது, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
* வரம்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்பு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும்.
* பழங்குடியினர் பகுதிகளில் உள்ள எந்த சொத்துக்களையும் வக்பு சொத்தாக அறிவிக்க முடியாது என்ற சிறப்பு விதி மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளது.

The post மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு பின் நள்ளிரவில் நிறைவேற்றம்: மதத்திற்கு சம்மந்தமில்லை என அரசு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article