மக்களவை தேர்தலை விட திமுக கூட்டணிக்கு 5 சதவீத வாக்குகள் அதிகரிப்பு: அதிமுகவுக்கு 3 சதவீத வாக்குகள் சரிவு; இந்தியா டுடே -சி-வோட்டர் கருத்துக்கணிப்பு

3 months ago 4

புதுடெல்லி: இந்தியா டுடே- சி-வோட்டர் இணைந்து நடத்திய ஆய்வில் இன்றைய தேதியில் தேர்தல் வைத்தால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், அந்த கூட்டணிக்கு 5 சதவீத வாக்குகள் உயர்ந்துள்ளதாகவும் கணித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 3 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா டுடே -சி-வோட்டர் இணைந்து சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில், மக்களவை தேர்தலோடு ஒப்பிடுகையில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிமுகவின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளது. பாஜ கூட்டணியின் வாக்கு 3 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இந்நிலையில், இப்போது இந்த தேர்தல் நடைபெற்றிருந்தால் திமுக கூட்டணி 52 சதவீத வாக்குகளை பெற்றிருக்கும். பாஜ கூட்டணி 21 சதவீத வாக்குகளை பெற்றிருக்கும். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக, அதாவது பாஜ கூட்டணியைவிட குறைந்திருக்கும் என இந்தியா டுடே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் சீட்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றமில்லை. கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 39 இடங்களையும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கைப்பற்றியது.

இன்றைய தேதியில் தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் என்கிறது கருத்துக்கணிப்பு. அதாவது, பாஜ, அதிமுகவுக்கு இப்போதும் ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகமாகி உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளை பெற்றிருந்த பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி இப்போது தேர்தல் நடந்தால் 344 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜ மட்டும் தனித்தே 281 தொகுதிகளில் வெற்றி பெறும். அதே நேரத்தில், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளுக்கு பதிலாக 188 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கும். தற்போது 106 எம்.பி.க்களை பெற்றுள்ள காங்கிரசுக்கு 78 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

The post மக்களவை தேர்தலை விட திமுக கூட்டணிக்கு 5 சதவீத வாக்குகள் அதிகரிப்பு: அதிமுகவுக்கு 3 சதவீத வாக்குகள் சரிவு; இந்தியா டுடே -சி-வோட்டர் கருத்துக்கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article