மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளதாக மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதியன்று பேரவைத் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில், மகாவிகாஸ் தலைவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ‘‘மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் 255 இடங்களுக்கு கூட்டணியில் உடன்பாடு எட்டியுள்ளது. காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி ஆகியவற்றுக்கு தலா 85 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள 33 இடங்களில், 13 இடங்களை சிறிய கட்சிகளிடமும் பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.
* உத்தவ் கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர் அறிவிப்பு
உத்தவ் கட்சி சார்பில் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்து. 66 வேட்பாளர்களில், உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மீண்டும் ஒர்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் கோப்ரி- பஞ்பகாடி தொகுதியில், உத்தவ் கட்சி சார்பில் ஆனந்த் திகேவின் தம்பி மகன் கேதார் திகே களமிறக்கப்படுகிறார். மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகேவை, தனது அரசியல் குருவாக முதல்வர் ஷிண்டே கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் மகாவிகாஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு உடன்பாடு appeared first on Dinakaran.