அலாஸ்கா கடற்கரையில் விழுந்து மாயமான விமானத்தில் பயணித்த 10 பேரும் பலி: 2 நாட்களுக்கு பின் கண்டுபிடிப்பு; அமெரிக்காவில் பரபரப்பு

2 hours ago 1


வாஷிங்டன்: அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அலாஸ்கா கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தை 2 நாட்களாக தேடிய நிலையில், தற்போது அந்த விமானம் விழுந்த இடம் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து நோம் நகருக்கு 10 பேருடன் செஸ்னா 208பி என்கிற சிறிய ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்ட 40 நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் தொடர்பு ரேடாரில் இருந்து மாயமானது. இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

வெள்ளை மலை பகுதியில் விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடும் பணியும் நடைபெற்றது. அதேபோல, கடல் பகுதிகளிலும் விமானத்தை தேடினர். மேலும் விமானத்தைத் தேடுவதற்காக கோடியாக் விமான நிலையத்திலிருந்து ஹெச்-130 ஹெர்குலஸ் விமானமும் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே மாயமான விமானம் அலாஸ்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில், 10 பேருடன் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘சிறிய பயணிகள் விமானத்தில் இருந்த 10 பேரும் இறந்துவிட்டனர். விமானத்தின் பாகங்கள் எரிந்த நிலையில் சிதறிக் கிடந்தன. மூன்று பேரின் உடல்கள் விமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஏழு பேரின் உடல்கள் மற்ற இடங்களில் கண்டறியப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம் நோமுக்கு தென்கிழக்கே 34 மைல் (சுமார் 55 கி. மீ) தொலைவில் 2 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான பயணிகள் அனைவரும் பெரியவர்கள். சிறுவர்கள் எவருமில்லை. விபத்தில் சிக்கிய விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படையும், சிறப்பு தனிப்படையும் விசாரணை நடத்தி வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பனிமூட்டத்தால் மூடப்பட்ட நோம் நகரம். இந்த பகுதியில் இருந்து குறிப்பிட்ட பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. மேலும் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானத்தின் பகுதிகள் உறைந்த பனிப்பகுதியில் மீட்கப்பட்டன.

The post அலாஸ்கா கடற்கரையில் விழுந்து மாயமான விமானத்தில் பயணித்த 10 பேரும் பலி: 2 நாட்களுக்கு பின் கண்டுபிடிப்பு; அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article