தமிழகத்தில் 246 வட்டாரங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளது

2 hours ago 2


தஞ்சை: தமிழகத்தில் 246 வட்டாரங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் இருப்பதாக ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் தென் கிழக்கு கடலோர மண்டல இயக்குநர் சிவகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நீடித்த நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் தென் கிழக்கு கடலோர மண்டல இயக்குநர் சிவகுமார் அளித்த பேட்டி: 2024ம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் வகைப்படுத்துதல் பணி செய்யப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் நிலத்தடி நீர் 60 சதவீதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் 30 சதவீதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் பாதி நெருக்கடி நிலையிலும், முழு நெருக்கடி நிலையிலும், அதிக அளவிலான சுரண்டல் நிலையிலும் உள்ளன.

இந்த நிலைமை தமிழகத்தில் 246 வட்டாரங்களில் நிலவுகிறது. எந்த மாநிலம் தொழிலிலும், வேளாண்மையிலும் முன்னோடியாக இருக்கிறதோ, அங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு நிலத்தடி நீர் அதிக அளவில் எடுக்கப்படுகிறது என்றால், தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்பதுதான் அர்த்தமே தவிர, அதற்காக அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இந்த வளர்ச்சி நீடித்திருப்பதற்கும், வருங்காலத்திலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதற்கும் நிலத்தடி நீர் ஆதாரம் தொடர வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் 80 சதவீத தண்ணீர் வேளாண்மைக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நெல் சாகுபடியில் ஒரு போகத்துக்கு 1.5 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேவைப்படும்.

இதைத் தவிர்க்க தெளிப்பு நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றை நெறிப்படுத்தினால், நிலத்தடி நீர் நீடித்திருக்கும். இதைச் செய்தால் தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடி மாநிலமாகத் திகழும். இதற்காக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், வளமான தமிழ்நாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் 246 வட்டாரங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளது appeared first on Dinakaran.

Read Entire Article