
சென்னை,
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'விடாமுயற்சி'. இப்படத்தையடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் தற்போது கார் ரேஸில் பங்கேற்று வரும் அஜித், அடுத்தபடியாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதன்படி, அடுத்ததாக அஜித்தை, கார்த்திக் சுப்புராஜ், சிவா மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோரில் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நேரத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் அஜித்தை இயக்க உள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.