
சென்னை,
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார் என்றும், இது கோழைத்தனம் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது;
"மத்திய அரசு, முறையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறைத்து தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கின்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால் விடுகிற முதல்-அமைச்சரை கோழை எனக் கூறுபவர்கள் கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும். எந்த நிலையிலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றப்பட்டது உண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக இருக்கக்கூடிய ஒரு முதன்மையான முதல்-அமைச்சர்தான் எங்கள் முதல்-அமைச்சர் என அன்புமணி ராமதாசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்."
இவ்வாறு அவர் பேசினார்.