மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்-மந்திரி

2 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இதுவரை சுமார் 9.24 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 43.18 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு மதியம் 2.15 மணியளவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில மந்திரிகளுடன் திரிவேணி சங்கமத்தில் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் புனித நீராடினார். அப்போது முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article