நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'டாக்ஸிக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கர்நாடகாவின் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்திற்கு திடீர் சிக்கல் வந்துள்ளது. அதாவது, படப்பிடிப்பின் போது பெங்களுருவில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.