மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இன்று 1.60 கோடி பேர் புனித நீராடல்

2 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று 'மகி பூர்ணிமா' என்ற சிறப்பு வாய்ந்த தினம் என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பகல் 12 மணி வரை திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.60 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகா கும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. கும்பமேளா நிகழ்வுகளை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இன்று அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article