மகளை கொல்ல மகளின் காதலனுக்கே பணம் கொடுத்த தாய்... அடுத்து நடந்த திருப்பம்

3 months ago 22

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாகாந்த். இவரது மனைவி அல்கா(வயது 42). கடந்த 5-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அல்கா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அல்காவின் கணவர் அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜஸ்ரத்பூர் அருகே வயல்வெளியில் கிடந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக போலீசாரிடம் இருந்து அல்காவின் கணவர் ராமகாந்துக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த ராமகாந்த், அது தனது மனைவியின் சடலம்தான் என்பதை உறுதி செய்தார். மேலும் தன் மனைவியின் உயிரிழப்பில் அகிலேஷ் மற்றும் அனிகேத் ஆகிய இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் ராமகாந்த் தெரிவித்தார்.

முன்னதாக அல்கா-ராமகாந்த் தம்பதியினர் மைனர் சிறுமியான தங்கள் மகளை அகிலேஷ் மற்றும் அனிகேத் ஆகிய இருவரும் கடத்திச் சென்றதாக நயா கோன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார், கடத்திச் செல்லப்பட்ட மைனர் சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பயந்துபோன அல்கா, தனது மகளை பரூக்காபாத் மாவட்டம் சிகந்தர்பூர் காஸ் கிராமத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு அல்காவின் மகளுக்கு 38 வயதான சுபாஷ் என்ற நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. சுபாஷ் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். இதற்கிடையில், சிறைக்கு சென்று வந்த நபரை தனது மகள் காதலித்து வரும் விவகாரம் அல்காவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அல்கா, தனது மகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த வேலையை செய்து முடிக்க சரியான ஆளை அவர் தேடியிருக்கிறார்.

இறுதியில், சுபாஷ்தான் தனது மகளின் காதலன் என்பது தெரியாமல், அவரிடமே இந்த வேலையை அல்கா கொடுத்திருகிறார். இந்த கொலை திட்டம் குறித்து அல்காவின் மகளிடம் சுபாஷ் கூறவே, காதலனும், காதலியும் சேர்ந்து அல்காவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதன்படி அல்காவை ஆக்ராவில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சிக்கு வருமாறு சுபாஷ் அழைத்துள்ளார். அங்கிருந்து நக்லா சந்தன் பகுதிக்கு அல்காவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அல்காவின் மகளும் வந்து சேர்ந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து அல்காவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அல்காவின் மகளையும், அவரது காதலன் சுபாஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article