
https://www.youtube.com/watch?v=SfY2t1auzfY
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் கடந்த 2.7.2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதற்காக கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதேபோல் கடந்த 1-ந் தேதி முதல் கோவில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
இதுதவிர சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 71 ஓம குண்டங்களும், அதன் அருகே சுவாமி பெருமாளுக்கு 5 ஓம குண்டங்களும் என மொத்தம் 76 ஓம குண்டங்களுடன் மிக பிரமாண்டமாக தங்க நிறத்தில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த யாகசாலையில் பல்வேறு வர்ணம் பூசி, வண்ண பேப்பர் ஒட்டி, சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் யாகசாலை முழுவதும் தங்க நிறத்தில் மிகவும் தரமான அட்டை ஒட்டப்பட்டுள்ளது. இந்த யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி இரவு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தினமும் காலை மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
அதேபோல் சுவாமி பெருமாளுக்கு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் நேற்று முன்தினம் மாலையில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று அதிகாலை காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று வருகின்றது. இந்த யாகசாலை பூஜைகளில் தினமும் காலை மற்றும் மாலையில் 108 ஓதுவார் மூர்த்திகளால் தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கின்றது.
அதே நேரத்தில் கோவில் விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கின்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேதங்கள் ஓதப்படுகின்றன. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் 20 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
அதேபோல் சுவாமி குமரவிடங்கபெருமான், ஜெயந்திநாதர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் உள்ளிட்ட பரிவார மூர்த்தி சுவாமிகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்.
விழாவை பக்தர்கள் எந்தவித நெருக்கடி இன்றி காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் விழாவை நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக நீராடும் வகையிலும், ஆழமான பகுதிக்கு செல்லாத வகையிலும் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டு தீயணைப்பு மற்றும் மீன்வளத் துறையினர் படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் ராஜகோபுரம், கிழக்கு கோபுரம் மற்றும் கோவில் பிரகாரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதனால் கோவில் விடுதிகள், தனியார் விடுதிகள் மற்றும் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி அளிக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. மேலும் திருச்செந்தூரில் தற்காலிகமாக 3 பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக 30 இலவச பஸ்களும் இயக்கப்படுகிறது. சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.