
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஜெட் தனியார் விமானம் காலை 10.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 65 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என 70 பேர் இருந்தனர். நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி வந்தபோது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். அதே நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்தால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
விமான என்ஜினீயர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி எந்திர கோளாறை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்கு உள்ளேயே அமர வைக்கப்பட்டு இருந்தனர். எந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு சுமார் 3½ மணி நேரம் தாமதமாக மதியம் 1.50 மணியளவில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து வானில் பறக்க தொடங்குவதற்கு முன்னதாகவே எடுத்த துரித நடவடிக்கையால் 70 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.