மகளுக்கு குழந்தை திருமணம் செய்ததால் வழக்கு: போலீசுக்கு பயந்து தம்பதி ரயிலில் பாய்ந்து தற்கொலை

10 hours ago 3

ஜோலார்பேட்டை: மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த தம்பதியர், போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் குமார்(50). இவரது மனைவி கவிதா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் 17 வயது மகளும், அதேபகுதியை சேர்ந்த உறவினரான கார்த்தி(35) என்ற வாலிபரும் காதலித்துள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் சிறுமியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு திருமணம் செய்தது தெரியவரவே, மணமக்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோரான குமார், கவிதா மற்றும் கார்த்திக், அவரது தாயார் ஆகிய 4 பேரும் கடந்த 24ம் தேதி முன்ஜாமீன் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றனர். இதற்கிடையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்து நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர்- காக்கங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆதியூர், மொளகரம்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் குமார், கவிதா ஆகியோர் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று காலை அங்கு சென்று உடல் பாகங்களை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மகளுக்கு குழந்தை திருமணம் செய்ததால் வழக்கு: போலீசுக்கு பயந்து தம்பதி ரயிலில் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article