கோடை காலத்தில் நாம் நமது உடல் நலத்தில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியது முக்கியமோ, அதை விட முக்கியம் வீட்டில் உள்ள முதியவர்களின் நலனின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது. வயதானவர்கள் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளால் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
பொதுவாகவே, முதியோர்களுக்கு வயது முதிர்ந்த காலத்தில் உடல் ரீதியாக நிறையவே பிரச்னைகள் இருக்கும். அதிலும், கோடையில் அதிகளவு வெப்பத்தின் காரணமாக, இன்னும் கூடுதலான பிரச்னைகளை சந்திக்கக்கூடும். முதியவர்களை பொறுத்தவரை, பொதுவாக பார்க்கப்படுவது ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய், காது மந்தமாக கேட்பது, பார்வை கோளாறு, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்ற பல பிரச்னைகள் இருக்கும். அதுவே, கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால், இன்னும் கூடுதலான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மேலும் பல சிக்கல்கள் வரலாம்.
அவை, உடலில் நீரிழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவது ஹைபர்நாட்ரிமியா (உடலில் உப்பின் அளவு குறைந்து போதல்), சிறுநீர் தொற்று போன்றவை இருக்கும். எனவே, இவர்கள் தினசரி தங்களை பராமரித்துக் கொண்டாலே அதிலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் அவர்கள். இது குறித்து முதியோர் நலன் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மேலும் கூறியதாவது: கோடைகாலம் தொடங்கியதுமே முதியோர்கள் எலக்ட்ரோலைஸ் என்ற பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
இந்த பரிசோதனையை செய்து கொள்ளும்போது, அவர்களது உடலிலுள்ள சோடியம், பொட்டாஷியம், பை கார்பனேட் போன்றவற்றின் அளவு பரிசோதிக்கப்படும். அதன்மூலம், அவர்களது உடல்நிலைக்கு தக்கவாறு தேவையான சிகிச்சை முறைகளை பரிந்துரைப்போம். இது ஒரு நல்ல பலன்தரக்கூடிய வழியாகும். அதுபோன்று, உடலில் ஏற்கெனவே பிரச்னை உள்ளவர்கள் என்றால், அவர்களை கூடுதலாக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். இவர்கள் வெளியே செல்லும்போது, உப்பு கலந்த லெமன் ஜூஸ் அல்லது உப்பு கலந்த மோர் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
இதனை அடிக்கடி அருந்தும்போது, அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அது போன்று சிறுநீர்தொற்று இருப்பவர்கள், பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதாவது, இளநீர் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளலாம். இதுவே, ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. வயதானவர்கள் குறிப்பாக கோடைகாலத்தில் முறையாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தாகம் இல்லாவிட்டாலும் நாள் முழுவதும் அவ்வப்போது போதிய அளவு தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கவும்.
அவர்களுக்கு தண்ணீர் எளிதில் கிடைக்கும் வகையில் வைக்கவும். அவ்வப்போது தண்ணீர் குடிக்கும்படி அவர்களுக்கு நினைவூட்டுங்கள். நீரிழப்புக்கு பங்களிக்கும் எந்த உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். கோடைகாலத்தில் வயதானவர்களுக்கு இலகுரக மற்றும் தளர்வான ஆடைகளை தேர்வு செய்து அணியச் செய்யுங்கள். இதன் மூலமாக அவர்களது உடல் வெப்பநிலை சரியாக நிர்வகிக்கப்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து அவர்களை பாதுகாக்க, வெளியே செல்லும்போது குடை பயன்படுத்தச் சொல்லுங்கள். முடிந்தவரை நிழலிலேயே அவர்களை இருக்கச் செய்வது அவசியம்.இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
* இதையெல்லாம் கடைபிடிக்கலாம்
கோடைகாலத்தில் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் படியான உணவுகளை கொடுக்க வேண்டும். அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறி உணவுகளை, அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ள செய்யவேண்டும். மேலும் எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை, அவர்களுக்கு கொடுப்பது மிகவும் அவசியமானது.
குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது உணவு கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில், அவர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்கச் செய்து குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற குறைந்த தீவிரம் கொண்ட பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கலாம். இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதும் மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.
* யோகா-தியானம் செய்வதே நல்லது
வெயில் காலத்தில் முதியவர்கள் வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வதை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்பின் அளவு குறைந்துவிடும். இதனால், ஹீட் ஸ்ட்ரோக், டி ஹைட்ரேசன், சிறுநீர் தொற்று போன்றவை ஏற்படும். அதேசமயம், காலை வேளையில் சிறுசிறு உடற்பயிற்சி செய்யலாம்., ஸ்ட்ரெச் பயிற்சிகள், நடைப்பயிற்சி எல்லாம் காலையிலேயே முடித்துவிட வேண்டும்.
மாலையில் செய்யக்கூடாது. அதற்கு மாற்றாக, யோகாசனம், தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோய், இதய நோய், நரம்பியல் பிரச்னை, பார்க்கின்சன் நோய், மன அழுத்தம் போன்றவை இருப்பவர்கள், பி.பி, டெம்ப்ரேசர், ஹார்ட் ரேட், மூச்சு சுழற்சி, சர்க்கரை அளவு இவற்றையெல்லாம் தினசரி கண்காணித்துக் கொள்வது நல்லது என்கின்றனர் உடலியல் வல்லுநர்கள்.
* உப்பு அதிகம் சேர்க்க கூடாது
உப்பு வியாதி, ஹைபர் டென்ஷன், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கோடையில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொண்டாலும் ஆபத்துதான். ஆனால், காலை 11 மணி, மாலை 3 மணி என்று இரு வேளை மோரோ, லெமன்ஜூஸோ அருந்தலாம். அதுவே, உடலில் உப்பின் அளவு குறைவாக இருப்பவர்கள் ஒருநாளைக்கு நான்குமுறை கூட அருந்தலாம்.
ஹைபர்நாட்ரிமியா இருப்பவர்கள், சாப்பாட்டில் சிறிதளவு கூடுதலாக உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சாப்பாட்டுடன் ஊறுகாய், அப்பளம் சேர்த்து சாப்பிடலாம். இது அவர்களின் எனர்ஜி அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். ஹைபர் டென்ஷன் நோயாளிகளுக்கு உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது என்பது உணவியல் நிபுணர்களின் ஆலோசனை.
The post எலக்ட்ரோலைஸ் பரிசோதனை அவசியம்; கோடையில் முதியோரை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகம்: சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள் appeared first on Dinakaran.