வேலை வாய்ப்பை பெருக்கிட புதிதாக தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

9 hours ago 2

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வருடங்களாக சரியான மழை இல்லாமலும், சீரான விவசாயம் இல்லாமல் போனது. இதனால் இப்பகுதியில் வேறு தொழில் துறைகள் இல்லாத காரணத்தால், கரிமூட்ட தொழிலில் விவசாய பொதுமக்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 35 கிராம ஊராட்சிகளும், 1 பேரூராட்சியும் உள்ளது. இவற்றிற்கு உட்பட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான உப்பூர்,கடலூர், சித்தூர்வாடி, வெட்டுக்குளம், கலங்கா புலி, ஆவரேந்தல், பாரனூர், சோழந்தூர், வடவயல், மங்கலம், கலக்குடி, செங்குடி, பூலாங்குடி, பிச்சனா கோட்டை, ரெகுநாத மடை, பொட்டக்கோட்டை, புலி வீரதேவன்கோட்டை, குயவனேந்தல், அரியான் கோட்டை, ஆப்பிராய், நத்தக்கோட்டை, கூடலூர், ஆய்ங்குடி, திருத்தேர்வளை, ஆனந்தூர், ஏ.ஆர்.மங்கலம், கொன்னக்குடி, பகவதி மங்கலம், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாகவே சரியான மழை இல்லாததால் நெல் விவசாயம் பொய்த்து போய்விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவடை நேரத்தில் கனமழை பெய்ததால் விளைந்த கதிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி வீணாகி விட்டது. இந்த ஆண்டும் பருவமழை சில பகுதிகளில் அதிகமாக பெய்ததாலும், சில பகுதிகளில் மழை பொய்த்து விட்டதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. சில கிராமங்களில் மிளகாய், எள்,பருத்தி போன்ற விவசாயங்களும் உரிய நேரத்தில் சரியான மழை இல்லாததால் அந்த விவசாயங்களும் சரியான முறையில் இல்லாமல் போனது.

மேலும் இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்தபடியான மகசூல் கிடைக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விட்டது. அதையும் மீறி விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பயனடைய கூடிய வகையில் மக்களுக்கான வேலை வாய்ப்பை தரக்கூடிய வகையில், எந்தவிதமான தொழிற்சாலைகளோ, பெரிய, பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.

இதனால் இப்பகுதியில் படித்த இளைஞர்கள் திருப்பூர், கோவை, சென்னை, மும்பை, பெங்களூர், உள்ளிட்ட நகர்புறங்களை தேடி வேலை வாய்ப்பிற்காக சென்று விடுகின்றனர் . மற்றவர்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பிழைப்புக்கு வேறு வழி இன்றி விவசாயப் பொதுமக்கள் கிராமங்களில் ஏராளமாக உள்ள கருவேல மரங்களை பயன்படுத்தி கரிமூட்டம் போடும் தொழிலில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இப்பகுதியில் வெட்டப்படும் காட்டுகருவேல மரங்களை லாரிகள் மூலமாக லோடு, லோடாக திருப்பூர், கருர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விறகுகளாக விற்பனைக்காகவும் கொண்டு சென்று வருகின்றனர். பலர் கரிமூட்டம் போட்டும் வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும் இந்த கருவேல மரங்கள் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனாலும் இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வசிக்கும் நாங்கள் முற்றிலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் நாங்கள் செய்ய கூடிய விவசாய பகுதி அனைத்துமே வானம் பார்த்த பூமி என்பதால் போதிய அளவு சீரான மழை பெய்தால் மட்டுமே விவசாயம் கை கொடுக்கும் என்பது தான் உண்மை நிலை. ஆனால் கடந்த 4, 5 ஆண்டுகளாகவே சரியான வகையில் சீராக மழை பெய்யாமல் போனதாலும், விவசாயத்தில் உரிய மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் பலவகையிலும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம்.

தொடர்ந்து பல வருடங்களாக விவசாயத்தில் நஷ்டம் அடைந்ததால் பலர் விவசாயத்தையே மறந்து விட்டு, வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சென்று விட்டனர். எஞ்சி இருப்பவர்களில் பலர் செய்த விவசாயம் இந்த வருடமும் ஆரம்பத்தில் சீரான மழை இல்லாமல் பயிர்கள் கருகி போனது. மேலும் 2வது விதைப்பு விதைத்து பயிர்கள் முளைத்து கதிர் அறுவடை செய்யும் நேரத்தில், மழை பெய்து பல இடங்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி விட்டது.

அதனை அறுவடை செய்ய இயந்திரங்களுக்கு அதிகமான தொகை கொடுத்து அறுவடை செய்ய வேண்டி நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயத்தில் உழைப்பிற்கும், செலவு செய்ததற்கும் ஈடுகட்டும் வகையில் வருமானம் வராமல் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இவ்வாறான சூழ்நிலை இப்பகுதியில் நிலவி வருவதால் பலர் விறகு வெட்டுதல், கரிமூட்டம் போடுதல் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

இத்தொழிலில் ஈடுபடும் போது ஒரு நாளாவது ரத்த காயம் படாத நாளே இருக்காது. குடும்பத்தை காப்பாற்ற வருமானத்திற்கு வேறு வழி இல்லாததால் இது போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதார நலனுக்காக பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பை பெரும் வகையில் அரசு சார்பாக ஏதாவது பெரிய தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்றனர்.

The post வேலை வாய்ப்பை பெருக்கிட புதிதாக தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article