தியாகராஜ நகர்: கோடை விடுமுறை எதிரொலியாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் மக்கள், குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் நெல்லை ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் மோதியது. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணி நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் தென்மாவட்ட மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடும்பத்துடன் பண்டிகை, திருவிழா நாட்களிலும், கோடை விடுமுறையிலும் சொந்த ஊர்களுக்கு வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையடுத்து வெளியூர்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வரத்துவங்கி உள்ளனர். 6 வாரங்கள் வரை விடுமுறை கிடைத்துள்ளதால், நீண்ட தூரங்களில் இருந்து வருவோர் மூட்டை, முடிச்சுகளுடன் ரயிலில் வந்திறங்குகின்றனர்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து வரும் பெரும்பாலான ரயில்கள் முழுவதும் பயணிகள் கூட்டத்துடனே நெல்லைக்கு வருகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து வரும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் வந்திறங்கும் அவர்கள், இங்கிருந்து செங்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்களிலும், அரசு பஸ்களிலும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனால் நெல்லை சந்திப்பு பகுதி, இரவு நேரங்களிலும் வழக்கத்துக்கு மாறாக பரபரப்புடன் காணப்படுகிறது. இதேபோல் அரசு பஸ்களில் ஊருக்கு திரும்புவோர், நெல்லை புதிய பஸ் நிலையம் வழியாக ஊருக்கு திரும்புகின்றனர். தூத்துக்குடி, தென்காசி ரயில் நிலையங்கள் வழியாகவும் அப்பகுதி மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களும் களைகட்டியுள்ளன.
The post கோடை விடுமுறை எதிரொலி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: நெல்லை ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.