
சென்னை,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் நல்லாட்சி புரிந்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலில், துணை முதல்-அமைச்சர், சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வண்ணம், மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள் போன்றவை நடத்திட ஆணையிட்டு, அக்கண்காட்சிகளை துவக்கி வைத்தும், கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டும் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இணைய வழி விற்பனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, அமேசான், பிளிப்கார்ட், மீசோ, இந்தியா மார்ட், ஜியோ மார்ட், பூம் மற்றும் அரசு மின் சந்தை போன்ற இ-வர்த்தக முன்னணி நிறுவனங்களின் இ-வர்த்தக தளங்களில் இதுவரை 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம், அடுக்குமாடி விற்பனை சந்தை மற்றும் இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ. 194.57 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் வழியில், சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் துணை முதல்-அமைச்சரின் ன் சீரிய நடவடிக்கைகளின் பலனாக, சுய உதவிக் குழுக்கள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்று, வளமான வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்களின் தரமான தயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.