![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/01/36954544-washes.webp)
மெல்போர்ன்,
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 422 ரன்கள் அடித்திருந்தது. பெத் மூனி 98 ரன்களுடனும், தஹ்லியா மெக்ராத் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அன்னாபெல் சதர்லேண்ட் 163 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேற்கொண்டு 18 ரன்களுக்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்து 440 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பெத் மூனி 106 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 270 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இம்முறையும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 68.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 148 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷ்ஸ் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாமி பியூமாண்ட் 47 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 5 விக்கெட்டுகளும், ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களையும் முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று இம்முறை மகளிர் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியுள்ளது.