திஸ்பூர்,
அசாம் மாநிலத்தின் ஜிலி ஆற்றின் கரையில் செப்டம்பர் 27, 2024 அன்று இரண்டாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த வெடிகுண்டை விமானப்படையினர் கண்டுபிடித்தனர். இது, 182 கிலோ எடை கொண்டது எனவும், செயலில் உள்ள ஆபத்தான வெடிகுண்டு எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் விமானப்படை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள துலுங் ரிசர்வ் வனப்பகுதிக்குள் வெடிகுண்டு கொண்டுசெல்லப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு இருக்கும் பகுதியில் இருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், வனவிலங்குகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. எந்த பிரச்சினையும் இல்லாமல் வெற்றிகரமாக வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.