![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39277170-chennai-07.webp)
மதுரை,
மதுரை மாட்டுத்தாவணி பிரதான சாலையில் ஆம்னி பஸ் நிலையத்தின் முன்பாக சாலையின் நடுவே பழமையான நுழைவு வாயில் (தோரண வாயில்) உள்ளது. இந்த நுழைவு வாயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வந்தது. எனவே, இதனை இடிப்பதற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயிலை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் நடந்தது.
அதன்படி பொக்லைன் ஆபரேட்டர், தோரணவாயில் பகுதிகளை எந்திரம் மூலம் இடித்து கொண்டிருந்தார். அப்போது தோரணவாயில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்தது. இதில் சம்பக்குளம் பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் (வயது 32)என்பவர் மீது தூண் விழுந்தது. மேலும் ஒப்பந்ததாரர் சிந்தாமணியை சேர்ந்த நல்லதம்பியும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நல்லதம்பி மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தோரணவாயில் இடிந்து விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரர் நல்லதம்பி மீது 3 பிரிவுகளின் கீழ் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.