
பாலக்காடு,
பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே மணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரண் (வயது 38). இவருடைய மனைவி அகீனா. இவர்களது மகன் கிஷன் (9). கிரண் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே கடந்த மே மாதம் 14-ந் தேதி அகீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த கிரண் சொந்த ஊர் திரும்பி, தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.
இந்த தற்கொலை குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனது சகோதரியின் வீட்டில் இருந்த கிஷனை கிரண் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அருகில் உள்ள உறவினரிடம் வெளியே சென்று வருவதாக கூறினார். ஆனால், வீட்டு முன்பு ஸ்கூட்டர் நின்றதோடு, முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் உறவினர் பின்வாசல் வழியாக சென்று பார்த்தார்.
அப்போது வீட்டுக்குள் தந்தையும், மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்த ஒற்றப்பாலம் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒற்றப்பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிஷனை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு விட்டு கிரண் தற்கொலை செய்ததும், அவரது மனைவி இறந்த அதே அறையில் இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை. மனைவி இறந்த துயரம் தாங்க முடியாமல் கிரண் தனது மகனை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து சொரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோஜ்குமார், ஒற்றப்பாலம் இன்ஸ்பெக்டர் அஜீஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.