போபால்:மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு தலையிலிருந்து வளர்ந்த கை போன்ற உறுப்பை அகற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த அசோக் நகரைச் சேர்ந்த மூன்று சிறுமி, பிறக்கும் போதே அவரது கழுத்தின் பின்பகுதியில் சதைப்பற்றுள்ள ஒரு கட்டி இருந்தது. குழந்தை வளர வளர, அந்த கட்டி போன்ற உடல் உறுப்பும் வளரத் தொடங்கியது. இதன் சிகிச்சைக்காக பெற்றோர் தங்களது குழந்தையை போபால் எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
விரிவான பரிசோதனையில், மண்டை ஓடு மற்றும் தண்டுவடத்தில் ஒட்டியவாறு, வளர்ச்சியடையாத ஒரு உடல் பகுதியும் (இடுப்பு எலும்புகள் உட்பட) இருப்பது கண்டறியப்பட்டது. இந்த உறுப்பு, மூளையின் மிக நுட்பமான பகுதியான மூளைத் தண்டுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. இது ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரின் உடல் பகுதி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இன்ட்ராஆப் நியூரோ தொழில்நுட்பத்தைப் (அறுவை சிகிச்சையின் போது நரம்பியல் செயல்பாட்டைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம்) பயன்படுத்தி, மருத்துவர்கள் குழு 7 மணி நேரம் மேற்கொண்ட நீண்ட அறுவை சிகிச்சையின் மூலம், சிறுமியின் மூளை மற்றும் கழுத்துடன் இணைந்து வளர்ந்திருந்த அந்த கூடுதல் உடல் உறுப்பை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அந்த சிறுமி நலமாகத் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post ம.பி-யை சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு தலையிலிருந்து வளர்ந்த கை போன்ற உறுப்பு அகற்றம்: எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.