நிபுணர் குழுவின் ஒப்புதலை பெற்ற பிறகே கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

11 hours ago 2

சென்னை: மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோயில்கள் சீரமைப்பு, கோபுர கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி கோவில் அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கோவில் சீரமைப்பு பணிகளையும், ராஜ கோபுர கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு, குடமுழுக்கு தேதி அறிவித்து இருந்த நிலையில் திடீரென குடமுழுக்கு நடத்த அனுமதி மறுத்து அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதேபோல் கோயில் பூசாரி சிவராஜ், திருப்பணிக் குழு அமைத்து அதில் தன்னையும் சேர்த்து குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன்், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மண்டல, மாநில நிபுணர் குழுக்களின் அனுமதி பெறாமல் கோயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கோவில் குடமுழுக்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இரு நிபுணர் குழுக்களின் அனுமதியை பெற்று சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, மீண்டும் குடமுழுக்கு நடத்த 60 நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் குழுக்களின் அனுமதியை பெற்றே கோயில் சீரமைப்பு, கோபுர கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வது குறித்து அறநிலையத் துறைக்கு விண்ணப்பித்து, உரிய அனுமதிகளை பெற்று 60 நாட்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post நிபுணர் குழுவின் ஒப்புதலை பெற்ற பிறகே கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article