சென்னை: தமிழக பாஜ புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வானார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதற்காக சென்னை வானகரத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவர் தலைவராக பதவியேற்று கொண்டார். தமிழக பாஜ தலைவர் போட்டியில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர். கடைசி நேரத்தில் நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று முன்தினம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அவர் மட்டுமே விருப்ப மனுதாக்கல் செய்தார்.
திடீரென பாஜ நிர்வாகி ஒருவர் விருப்ப மனுவை வழங்க வந்தார். இதை பார்த்த எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால் அவர் தமிழக பாஜ தலைவராக போட்டியின்றி தேர்வாவது உறுதியானது. இதுதொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழக பாஜ தலைவர் பதவிக்கான விருப்ப மனு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை பல செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சரி, மத்திய அரசின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதிலும் சரி, அண்ணாமலையின் பங்கு அளப்பரியது. அண்ணாமலையின் திறன்களை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பாஜ பயன்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், நயினார் நாகேந்திரன் பாஜ மாநில தலைவராகவும், அண்ணாமலை தேசிய பொறுப்புக்கும் மாற்றப்படுவது உறுதியானது. தமிழக பாஜவின் 13வது தலைவர் அறிவிக்கும் நிகழ்ச்சி வானகரத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கான சான்றிதழை பாஜ தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் அளித்தனர். அப்போது பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரனுக்கு பிரசாதம் வழங்கினார். இதை தொடர்ந்து பாஜவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். அவருக்கு முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கினார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேடையில் இருந்த தலைவர்கள் உள்பட அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலைக்கு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
* அண்ணாமலை புயல், நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு
பாஜ மாநில புதிய தலைவராக பதவி ஏற்ற நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தலைவர் பதவி அல்ல, தலைமை தொண்டன் பதவியில் பணியாற்ற வந்திருக்கிறேன். அண்ணாமலை புயல், நான் தென்றல். ‘என் மண், என் மக்கள்’ என பட்டிதொட்டியெல்லாம் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அண்ணாமலை. வரும் தேர்தலில் 40 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். பாஜ மாநில தலைவர் பதவியில் பொறுப்பேற்றதில் எனக்கு ஒரு பயமும், அச்சமும் இருக்கிறது. அண்ணாமலை காலில் செருப்பு இல்லாமல் இருக்கிறார். ஆட்சி மாற்றத்திற்கான அடிக்கோல் இடப்பட்டுள்ளது. அமித்ஷா அதற்கு அடிக்கல் நாட்டி விட்டார். எனவே அண்ணாமலை இன்று முதல் செருப்பு அணிய வேண்டும். இவ்வாறு பேசினார்.
* அண்ணாமலைக்கு புதிய பதவி
விழா மேடையில் பாஜ மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி பேசுகையில், “தென் சென்னை தொகுதியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன், திருப்பூர் தொகுதியில் இருந்து வானதி சீனிவாசன், நீலகிரியில் இருந்து எல்.முருகன், கோவையில் இருந்து அண்ணாமலை, கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று அறிவித்தார். இதுபோல, சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பாஜவில் ஐக்கியமான நடிகர் சரத்குமாருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், வினோஜ் பி.செல்வம், சசிகலா புஷ்பா, ஏஜி சம்பத், பால் கனகராஜ் என 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 5 மண்டலங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
* சபதம் நிறைவேற்றாமலே மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை
தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை இருந்தபோது திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்தார். இனி ஜென்மத்துக்கு அண்ணாமலையால் செருப்பு அணிய முடியாது என்று திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலையின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை செருப்பு அணிய வேண்டும் என்று கேட்டு கொண்டார். நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அண்ணாமலை செருப்பு அணிந்து கொண்டார். விழா மேடையில் அவருக்கு செருப்பு வழங்கப்பட்டது. அங்கேயே அவர் செருப்பு அணிந்து கொண்டார்.
* நயினாருக்கு துணையாக இருப்பேன் அண்ணாமலை பேச்சு
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்திற்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார். இந்த சமயத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக பா.ஜ.வின் புதிய தலைவர் அறிவிக்கப்படுகிறார். இந்த புதிய தலைவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழக பா.ஜ.வை வழிநடத்தி, 2026 தேர்தலில் திமுகவை அகற்றுவதற்கு முன்னோடியாக இருப்பார். பாஜவிற்காக உயிர்கொடுத்த தலைவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழக பாஜவுக்கு இலக்கு தெரியும், பாதையும் தெரியும்.
இந்த கட்சிக்கு ஒரு ஆன்மா இருக்கிறது என்று தமிழக பா.ஜ.வின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னிடம் கூறினார். இப்போது அந்த ஆன்மா, கட்சிக்கான புதிய தலைவரை அடையாளம் காட்டியுள்ளது. யார் தலைவராக வந்தாலும் முழுமனதாக ஏற்றுக்கொண்டு அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் தொண்டர்களை கொண்டது பாஜ. திருநெல்வேலி சீமையை சார்ந்தவரான நயினார் நாகேந்திரனுக்கு நாம் துணையாக நின்று, 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர அயராது பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
* ஓபிஎஸ் வாழ்த்து
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக பாஜ தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவரது பணி சிறக்கவும் எனது நல்வாழ்த்துகள்’’ என கூறியுள்ளார்.
The post அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்தது தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு: சென்னையில் நடந்த விழாவில் தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.