போபால்: ராணுவ கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ எனக் குறிப்பிட்டுப் பேசிய ம.பி. பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது 4 மணி நேரங்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தாமாக முன்வந்து ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது குறித்த ஊடக சந்திப்புகளின் போது முக்கிய முகமாக இருந்தவர் கர்னல் சோபியா குரேஷி. அவரைப்பற்றி மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், ‘எங்கள் மகள்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை துடைத்தார்கள்.
பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவர்களின் சகோதரியை அனுப்பினோம்’ என்று தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்துகட்சிகளும் தெரிவித்தன. அரசியல் ரீதியாகவும், சமூக ஊடகங்களிலும் அவரை கடுமையாக பலரும் விமர்சித்தனர்.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில், ‘ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக கர்னல் சோஃபியா குரேஷி குறித்து நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. சகோதரி சோஃபியாவை அவமதிப்பது குறித்து கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக நான் 10 முறை மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். இந்த சம்பவம் நடந்ததிலிருந்து நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன்’ என்று கூறினார்.
இந்நிலையில் ம.பி. பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது 4 மணி நேரங்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தாமாக முன்வந்து ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்தால், பாஜக தலைமை கடும் வருத்தத்தில் உள்ளது. மேலும் பாஜக தலைமை கொடுத்த அழுத்தத்தால் தற்போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
The post ம.பி. பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.