சேலம், அக்.24: மேட்டூரை அடுத்த மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பகத்சிங். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயலிடம் நேற்று மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: நான் சேலம் மாவட்ட நீதிமன்றத்திலும், மேட்டூர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த செப்.22ம் தேதி எனது கட்சிக்காரர் வழக்கு சம்பந்தமாக அழைத்ததன்பேரில் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ. சிறப்பு எஸ்.ஐ., தலைமை காவலர் ஆகியோர் என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசி கைது செய்துவிடுவதாக கூறி என்னுடைய செல்போனையும் பிடுங்கி வைத்துக்கொண்டனர். மேலும் என்னை சட்டவிரோதமாக மூன்று மணிநேரம் போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து வைத்து அவமதித்துள்ளனர்.
இது சம்பந்தமாக போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி அன்றைய தினம் சேலம் சரக டிஐஜி.,யிடமும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். ஆனால் இதுவரையில் என் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னை அவமதித்த போலீசார்கள் மீது வழக்குப்பதிவு செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனுஅளித்தபோது மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், பாமக மாநில மாணவர் சங்கசெயலாளர் வழக்கறிஞர் விஜயராசா, மாநகர, மாவட்ட அமைப்பு செயலாளர் குமார், சட்டபாதுகாப்பு குழு சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post போலீசார் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் மனு appeared first on Dinakaran.