போலி உத்தரவாதம் கொடுத்து பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: சிபிஐ பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

3 months ago 10

சென்னை: போலி உத்தரவாதம் கொடுத்து பெல் நிறுவனத்திடம் பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அடையாறைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை அத்திப்பட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அவர் கம்பெனி பெயரில் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பணி எடுத்துச் செய்யலாம் என்னை அணுகினார்.

நானும் இதை ஏற்றுக் கொண்டு 2020ம் ஆண்டு அவருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டேன். இந்த பணிக்காக நான் பணம் செலவழித்தேன். பணி முடிந்த பின்னர் பணத்தை கேட்டபோது அதை ரவி தரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து போலியான உத்தரவாதத்தை பெல் நிறுவனத்துக்கு ரவி கொடுத்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. பெல் நிறுவனம் மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல இடங்களில் போலி வங்கி உத்தரவாதத்தை அளித்து ஒப்பந்தப் பணியை இவர் எடுத்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பெல் நிறுவனத்தின் விஜிலென்ஸ் தலைமை அதிகாரியிடமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விஜிலென்ஸ் தலைமை அதிகாரியிடமும் கடந்த 2022ம் ஆண்டு புகார் செய்தேன். நடவடிக்கை எதும் எடுக்கப்படாததால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐ சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

The post போலி உத்தரவாதம் கொடுத்து பணி ஒப்பந்தம் செய்தவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: சிபிஐ பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article