ஆவடி: போலி ஆவணங்கள் தயாரித்து ரூ1.80 கோடி நில மோசடியில் ஈடுபட்டவரை ஆவடி குற்றப்பிரிவின் நிலமோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்ததும் அம்பலமாகியுள்ளது. மீஞ்சூர் அருகே வல்லூர், லட்சுமி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (64). இவர், பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் மொத்தம் 3,600 சதுர அடி கொண்ட காலிமனையை செல்வநாதன் என்பவரிடம் இருந்து கிரையம் பெற்று, கடந்த 1985ம் ஆண்டு முதல் அனுபவித்து வந்துள்ளார். அந்த இடத்தை கோட்டீஸ்வரிக்கு தெரியாமல், கடந்த 1999ம் ஆண்டு சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த செல்வநாதனின் மகன் தமிழ்செல்வன் (42) என்பவர் அபகரிக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கோட்டீஸ்வரி இறந்துவிட்டதாக போலி சான்று தயாரித்து, அவரது வாரிசுகளாக சவுபாக்கியவதி, அம்சவேணி ஆகிய 2 பெண்களை நடிக்க வைத்து, அவர்களுக்கு போலி வாரிசு சான்றிதழை தமிழ்ச்செல்வன் தயாரித்துள்ளார்.
பின்னர் கோட்டீஸ்வரியின் மகள்களாக 2 ஆள்மாறாட்ட பெண்களை வைத்து, தனது பெயருக்கு கோட்டீஸ்வரியின் 3600 சதுர அடி காலி இடத்தை, சென்னை திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரப்பதிவு செய்து, ரூ30 லட்சம் மதிப்பிலான நிலத்தை தமிழ்செல்வன் மோசடி செய்துள்ளார். இதேபோல் மீஞ்சூர், ரமணா நகரைச் சேர்ந்தவர் தசரதன் (65). இவர், தன் பெயரிலும், தனது மனைவி விஜயலட்சுமி பெயரிலும், வெள்ளிவாயல்சாவடியில் 7 ஏக்கர், 52 சென்ட் இடத்தை கிரையம் பெற்று, முறையாக பட்டாவுடன் அனுபவித்து வந்துள்ளார். இதில், தசரதனின் மனைவி விஜயலட்சுமி உயிருடன் இருக்கையில், அவர் இறந்துவிட்டதாக போலி சான்று தயாரித்து, அவரது ஒரே வாரிசு தசரதன் எனக் குறிப்பிட்டு, தமிழ்செல்வன் போலி சான்றுகள் மற்றும் பட்டாவை தயாரித்துள்ளார். பின்னர் தசரதன் என்ற பெயரில் ஆள்மாறாட்ட நபர் மூலமாக கடந்த 2022ம் ஆண்டு தனது பெயருக்கு திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரத்தை பதிவு செய்து, சுமார் ரூ1.50 கோடி மதிப்பில் தமிழ்ச்செல்வன் நிலமோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட 2 புகார்களின்பேரில், ஆவடி காவல் ஆணையரகத்தின் குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, போலி இறப்பு சான்று தயாரித்து, ஆள்மாறாட்ட நபர்கள் மூலம் ரூ1.80 கோடி நிலமோசடியில் ஈடுபட்ட திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (42) என்பவரை நேற்று முன்தினம் மாலை ஆவடி குற்றப்பிரிவின் நிலமோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post போலி ஆவணங்கள் தயாரித்து ரூ1.80 கோடி நில மோசடியில் ஈடுபட்டவர் சுற்றிவளைப்பு: 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்தது அம்பலம் appeared first on Dinakaran.