
துபாய்,
6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்தது. வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
இதனிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த போர்ப்பதற்றம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஒரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இந்த மோதலில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில் நடந்த டிரோன் தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்ததுடன், சிலர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எல்லா அணி நிர்வாகத்துடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் பி.எஸ்.எல். தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீரர்கள் பத்திரமாக துபாய் அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து தங்களது நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர்ப்பதற்றத்தின்போது பி.எஸ்.எல். தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அடைந்த துயரத்தை வங்காளதேச வீரர் ரிஷாத் ஹொசைன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சாம் பில்லிங்ஸ், டேரில் மிட்செல், குஷால் பெரேரா, டேவிட் வைஸ், டாம் கரன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மிகவும் பயந்தனர். துபாயில் தரையிறங்கிய மிட்செல், 'இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்குச் செல்லமாட்டேன்' என்று என்னிடம் கூறினார்.
குறிப்பாக இதுபோன்ற சூழ்நிலையில். ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் திகிலடைந்தனர். நாங்கள் விமான நிலையம் சென்றபோது அந்த விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவர் (டாம் கரண்) சிறு குழந்தை போல அழத் தொடங்கினார்.அவரைக் கையாள 2-3 பேர் தேவைப்பட்டனர்" என்று கூறினார்.