
லாகூர்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்த தாக்குதல் முழுமையான போருக்கு வழிவகுக்கும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று அறிவித்தார். மேலும், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆனால், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்று இரவு காஷ்மீர் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் எதையும் செய்வோம். மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நமது ராணுவ ரீதியிலான கொள்கைகளில் நாம் வெற்றியடைந்தோம். ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வெற்றிபெற்றுவிட்டது, இந்தியாவுக்கு எதிராக நாம் வெற்றிபெற்றுவிட்டோம். பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெற்றுள்ளது. சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். எங்கள் நம்பகமான நண்பன் சீனாவுக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும்போது சீனா உதவி செய்கிறது. அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றி கூறிக்கொள்கிறேன் ' என்றார்.