
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு காரணமாக ஜம்மு பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் முழு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணைய சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. மேலும் பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும், இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி மூட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.