
ஐதராபாத்,
இந்த ஆண்டுக்கான 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி(நாளை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக 2024 உலக அழகி போட்டி மும்பையில் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த 115 போட்டியாளர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும், மேலும் சிலர் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் துவக்க விழாவுடன் உலக அழகி போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த உலக அழகி போட்டியானது, 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் கலாசார அடையாளம் மற்றும் லட்சியத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் இந்தியா, அமெரிக்கா, வெனிசுலா, தெற்கு ஆப்பிரிக்கா, கிப்ரால்டர், மார்டினிக், குவாடெலூப் உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக திகழ்கின்றனர். இந்த ஆண்டு உலக அழகி போட்டியில் இந்தியாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா கலந்து கொள்கிறார்.
உலக அழகி போட்டி தொடக்க விழாவிற்கான ஒத்திகை கச்சிபவுலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்கள் மேடை அசைவுகள், நடை மற்றும் கலாச்சாரப் பிரிவு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் துல்லியமாக பயிற்சி செய்தனர்.
எதிர்வரும் வாரங்களில், போட்டியாளர்கள் தெலுங்கானாவின் பாரம்பரியம், கலைத்திறன் மற்றும் வாழ்வியலை கலாசார கண்காட்சிகள் மற்றும் விளக்கக் காட்சிகள் மூலம் தெரிந்துகொள்ள உள்ளனர். தொடர்ந்து மே 31-ந்தேதி HITEX கண்காட்சி மையத்தில் 2025 உலக அழகி இறுதிப்போட்டி பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அழகி போட்டிக்கான விரிவான ஏற்பாடுகளை தெலுங்கானா அரசு செய்துள்ளது. இந்த நிகழ்வு அழகு மற்றும் திறமையின் கொண்டாட்டம் மட்டுமல்ல என்றும், அதிகாரமளித்தல், பன்முகத்தன்மை மற்றும் உலகளாவிய ஒற்றுமைக்கான ஒரு தளமாகும் என்றும் தெலுங்கானா சுற்றுலாத்துறை மந்திரி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.